புதுதில்லி,
மக்களவை தேர்தலை முன்னிட்டு ஆண்டுக்கு 72 ஆயிரம் வழங்கப்படும் என்ற ராகுல் காந்தியின் திட்டத்தை விமர்சித்த நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தலில் மக்கள் ஆதரவை பெற , காங்கிரஸ் பல திட்டங்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஐந்து கோடி ஏழை குடும்பங்களுக்கு, மாதம், 6,000 என, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற ராகுல் காந்தி, இதன் மூலம், நாடு முழுவதும், 25 கோடி பேர் பயனடைய வாய்ப்புள்ளது என்று தெரிவத்துள்ளார்.
ஆனால், காங்கிரஸ் அறிவித்த குறைந்த பட்ச வருமான உறுதியளிப்பு திட்டம் சாத்தியமற்றது என்று நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியிருந்தார். தனது டுவிட்டரில் இது குறித்து அவர் கூறும் போது, நிலவை பிடித்துக் கொடுப்போம் என்ற பழைய வாக்குறுதி பாணியில், காங்கிரஸ் தலைவர் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
அது, பணி மனப்பான்மைக்கு எதிராக அமைவதுடன், நிதி ஒழுங்குமுறையை சிதற செய்துவிடும். இதன் செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகவும், பட்ஜெட்டில் 13 சதவீதமாகவும் இருக்கும். இத்திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. காங்கிரசின் முந்தைய கோஷங்களுக்கு ஏற்பட்ட கதிதான் இதற்கும் ஏற்படும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
ராஜீவ் குமாரின் இந்த கருத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பானது. இது குறித்து 2 நாளில் பதில் அளிக்க வேண்டும் என அவருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.