கோவை, ஏப்.4-
பாஜக எனும் மூழ்கும் கப்பலில் பயணிக்கும் அதிமுகவும் சேர்ந்து கவிழும்; கொள்கைக் கூட்டணியாக பயணிக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 இடங்களிலும் மகத்தான வெற்றி பெறும்’’ என்று கோவையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.‘‘இந்தியாவில் மோடி அலை வீசவில்லை.மோடிக்கு எதிரான அலை வீசிக்கொண்டி ருக்கிறது. 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்றாரா?. இருந்த ஆட்சிகளை பறிகொடுத்துவிட்டீர்கள். மோடி யுடன் புதிதாக யாரும் கூட்டணி சேரவில்லை. இதற்கு முன்னர் சேர்ந்தவர்கள் எல்லாம் வெளியே வந்துள்ளார்கள். தமிழகத்தை தவிர எங்கும் இல்லை. பாஜக ஒரு மூழ்கும் கப்பல். அத்துடன் சேர்ந்து அனைவரும் மூழ்க வேண்டியது தான். 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், இந்த 18 சட்டமன்ற தொகுதிகளுடன் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நடைபெறுகிற இந்த தேர்தல் மோடி, எடப்பாடி ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தல். சிறு, குறு, விவசாயம், தொழில் என அனைத்தையும் சீர்குலைத்த பாஜக-அதிமுக ஆட்சிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். சீர்கெட்டுள்ள கோவை மாவட்டம் பி.ஆர்.நடராஜன் வெற்றி பெறுவதன் மூலம் சீர் செய்யப்படும்’’ என்று கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
இரா.முத்தரசன்
சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், ‘‘கோவை மாநகரம் தொழிலாளர்களும், தொழிலும் மிகுந்த நகரம். தொழில்கள் நசிந்துவிட்டது. ஆகவே தொழிலும் பாதுகாக்கப்பட வேண்டும். தொழிலா ளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பி.ஆர் நடராஜனுக்கு வாக்களிக்க வேண்டும். கோவை மாநகராட்சியில் குடிநீர் தனியார்மயம் ஆகிவிட்டது. குடிநீரை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் விற்றுவிட்டது. இந்த மாநகராட்சி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சியில் குடிநீர் விற்பனைக்கு வந்துவிட்டது. ஆகவே மோடியும், பாடியும் வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும்’’ என்றார்.
வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், ‘‘ஜனநாயகமா? பாசிச வெறி யாட்டமா? என்ற கேள்விக்கு விடை காணும் தேர்தல் இது. ஆபத்தான துருப்புச் சீட்டை மோடி வீசுகிறார். இந்துத்துவா கூட்டம் எந்த வன்முறையையும் செய்ததில்லை என்று மோடி கூறு கிறார். இந்தியாவில் நடந்த வன்முறை செய்திகள் எதுவும் மோடியின் காதுகளை எட்ட வில்லையா’’ என்று கேள்வி எழுப்பினார்.
ஈஸ்வரன்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசுகையில், ‘‘அதிமுகதலைமைப் பொறுப்பில் இருக்கும் 10 பேர்ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்ப தற்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். பாஜகவுடன் அணி சேர்ந்ததில் இருந்து அந்த பத்து பேரையும் ஜெய லலிதாவின் ஆவி தூங்கவிடுவதில்லை. அதிமுகவினர் தங்களது வேட்பாளர் பட்டியலை ஏன் ஜெயலலிதா சமாதியில் வைத்து அம்மாவிடம் ஆசி பெறவில்லை? வேட்பாளர்கள் ஏன் ஜெயலலிதா சமாதிக்கு அழைத்துச் செல்லவில்லை. இந்தக் கேள்வி களுக்கெல்லாம் அவர்களிடம் பதில் இல்லை. பாஜகவினரும் மோடியும் கடந்த தேர்தலில் குஜராத் மாடல் என்று சொன்னார்கள். நம்பி ஏமாந்து அவர்களுக்கு வாக்களித்தோம். அந்தக் கொடுமையிலிருந்து மீள, அவர்களை விரட்டியடிக்க நமது அணியின் தோழர் பி.ஆர்.நடராஜனை வெற்றிபெறச் செய்ய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஊழியர்கள் இரவு பகலாக முழுமூச்சுடன் உழைப்பார்கள்’’ என்று கூறினார்.
காதர் மொகிதீன்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் பேசுகையில், ‘‘மாநில உரிமைகளை பேசவிடாமல் ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என சர்வாதிகார போக்கை பாஜக பின்பற்றி வருகிறது. மாட்டிறைச்சி என்ற பெயரில் மட்டும் பாஜக ஆட்சியில் 247 பேரை கொன்றுகுவித்திருக்கிறார்கள். அத்தகைய பாஜக என்கிற விஷக்காற்றை இறக்குமதி செய்வது போல தமிழ் மண்ணில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது. அவர்களை வீழ்த்தும் வரை ஓயமாட்டோம்’’ என்று கூறினார்.
பேரா.ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா பேசுகையில்,‘‘பெரும் பணக்காரர்களுக்கு காவல்காக்கும் வேலையை பாஜகவினர் செய்து வருகிறார்கள். பாகிஸ்தான் இந்திய எல்லையில் வாலாட்டினால் அதை ஒட்ட நறுக்க வேண்டும் என்ற இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால், மோடியின் மிக நெருங்கிய நண்பரான அதானி, பாகிஸ்தானுக்கு தடையில்லாமல் இங்கிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து வழங்குகிறாரே, அந்த அதானிக்கு மோடி எல்லாவிதத்திலும் காவல் இருக்கிறாரே அது எப்படி’’ என்று கேள்வி எழுப்பினார்.