தஞ்சாவூர், ஏப்.4-
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வேதாந்தம் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திடம் வாக்குகள் கேட்டு பேசினார். அப்போது எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசியதாவது, “இன்றைக்கு பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக வீதி வீதியாக ஓட்டு கேட்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கஜாபுயலால் பாதிக்கப்பட்ட போது டெல்டா பகுதிமக்களை வந்து சந்தித்தார்களா? புயல் தாக்கி ஐந்து நாட்களுக்கு பிறகு ஹெலிகாப்டரில் வந்து சென்றவர்கள். மக்கள் நலனை பற்றி அக்கறைப்படாதவர்கள், இன்று வாக்கு கேட்டு வீதி வீதியாக வருகிறார்களே. யோசித்தீர்களா? திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களும் தள்ளுபடிசெய்யப்படும். மீனவர்கள் பெற்றுள்ள கடன் கள், மகளிர் பெற்றுள்ள சுயஉதவிக்குழு கடன்கள், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப் படும். ஐந்து சவரன் நகைக்கு குறைவான வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படும். மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும். இப்பகுதி மீனவர்களின் குறைகள் களையப்படும்.மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைத்து தரப்படும். விவசாயத்திற்கென தனி பட்ஜெட் போடப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கான வேலை நாள் 150 நாட்கள் ஆக அதிகரிக்கப்படும். கூலி உயர்த்தி வழங்கப்படும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட இப்பகுதியில் பொதுமக்கள், விவசாயிகள், தென்னை விவசாயிகள், நலன் காக்க சிறப்பு திட்டம் செயல் படுத்தப்படும்” என்றார். கூட்டத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி,இந்திய ஜனநாயக கட்சி, மதிமுக, மனிதநேய கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.