யுபிஎஸ்சி தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களின் முக அடையாளங்களை சரிபார்க்கும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை யுபிஎஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய மின்-ஆளுமைப் பிரிவு (NeGD) உடன் இணைந்து உருவாக்கப்பட்ட முக அங்கீகார செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக யுபிஎஸ்சி தலைவர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 14-ஆம் தேதி ஹரியானாவில் நடத்தப்பட்ட தேசிய ராணுவ அகாடமி, கடற்படை அகாடமி மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளுக்கான தேர்வுகளில், 1,129 தேர்வர்களுக்கு சுமார் 2,700 வெற்றிகரமான ஸ்கேனிங் செய்யப்பட்டதாகவும், தேர்வர்களின் அடையாளங்களை 8-10 வினாடிகளில் இந்த ஏ.ஐ. அடிப்படையிலான தொழில்நுட்பம் மூலம் சரிபார்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வுகள் உட்பட அனைத்து யுபிஎஸ்சி தேர்வுகளிலும் இந்த முக அடையாள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். முக அடையாள அமைப்பை பயன்படுத்துவதற்கான WiFi வசதி, பணியாளர்களுக்கான பயிற்சி போன்ற அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மேலும், நடைமுறை விதிமுறைகள் (SOPs) தயாராகிக் கொண்டிருக்கின்றன என அவர் தெரிவித்தார்.