புதுதில்லி:
2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி மைனஸ் 12 சதவிதம் என்ற அளவில் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டுநிதி நிறுவனமான ‘யுபிஎஸ்’ (UBS - Investment banking company) மதிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் 2020-2021 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் -23.9 சதவிகிதமும், செப்டம்பர் வரையிலான 2-ஆவது காலாண்டில் மைனஸ் 17.5 சதவிகிதம் என்ற அளவிலும் இந்தியாவின் ஜிடிபி வீழ்ச்சி அடைந்தது.அதைத்தொடர்ந்து, டிசம்பர் வரையிலான 3-ஆவது காலாண்டில் 0.40 சதவிகிதம் என வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியஜிடிபி, 2021 ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் 1.6 சதவிகிதமாக உயர்ந்தது. நிதியாண்டின் முடிவில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.3 சதவிகிதமாகவே இருந்ததாலும், 2020-21 நிதியாண்டின் பிற்பாதியில் தொழிற்துறை உற்பத்தி, ஏற்றுமதி- இறக்குமதி வர்த்தகம் வேகமெடுத்ததால், 2021-22 நிதியாண்டில் பொருளாதார மீட்சி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா 2-ஆவது அலைஅந்த எதிர்பார்ப்பை மீண்டும் ஏமாற்றம்ஆக்கியுள்ளது.
இரண்டாவது ஆண்டாகவும் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தபட்ட ஊரடங்கு, வளர்ச்சிக்கு சவாலாக மாறியுள்ளது. இதனால், 2021-22 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி மீண்டும் மைனஸில் செல்ல வாய்ப்புள்ளதாகவும், மைனஸ் 12 சதவிகிதம் என்ற அளவிற்கு இந்த வீழ்ச்சி இருக்கும் என்றும் சுவிஸ் நாட்டின் பன்னாட்டு வங்கி அமைப்பான ‘யுபிஎஸ்’ கூறியுள்ளது. இது இந்தியாவின் ‘V’ வடிவிலான வளர்ச்சியை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.