economics

img

தொழில்முனைவோர்கள் வேலைநிறுத்தம்: 50 ஆயிரம் தொழில் கூடங்கள் மூடல் - தொழில் நகரம் கோவை ஸ்தம்பித்தது

மூலப்பொருட்களின் தொடர் விலையேற்றத்திற்கு காணரமான ஒன்றிய அரசை கண்டித்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் கோவையில் மாபெரும் வெற்றி பெற்றது. 50 ஆயிரம் தொழில்கூடங்களை மூடி ஒன்றிய அரசிற்கு தங்களது எதிர்ப்பை தொழில் நகரம் வெளிப்படுத்தியது.

கொரோனா காலத்தை தொடர்ந்து மூலப்பொருட்களின் விலைகள் இந்தியாவில் கடுமையாக உயர்ந்துள்ளது. நூறு சதவிகித விலையேற்றத்தின் காரணமாக ஜாப் ஆர்டர் பணிகளை செய்யும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த மூலப்பொருட்களின் விலை உயர்வால் பெரிய தொழிற்சாலைகளும் நெருக்கடையை எதிர்கொண்டு வருகிறது.

மேலும், இத்தொழில்களை நம்பியுள்ள இதர மறைமுக தொழில்களும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திந்து வருகின்றது. லட்ச்சக்கான தொழிலாளர்கள் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து ஒன்றிய அரசிடம் தொழில்முனைவோர்கள் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்காரணமாக மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிசம்பர் 20 திங்களன்று நாடு தழுவிய ஒருநாள் கதவடைப்பு போராட்டத்திற்கு 170 தொழில் கூட்டமைப்பை சேர்ந்த அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தது. 

இதன் ஒரு பகுதியாக கோவையில் சுமார் 60 ஆயிரம் தொழிற்கூடங்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் 1500 கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதோடு, கோவையில் மட்டுமே 6 லட்சம் தொழிலாளர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக கதவடைப்பு போராட்டத்தின் ஒருபகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஜிஎஸ்டியில் உள்ள குளருபடிகளை சரி செய்ய வேண்டும். கொரோனா கால ஊரடங்கு நெருக்கடியில் இருந்து தொழில்கள் மீள்வதற்கு ஏதுவாக வங்கியில் வட்டிகள் தள்ளுபடி செய்ய வேண்டும். தவனை காலத்தை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற கொடிசியா அமைப்பின் தலைவர் ரமேஷ்பாபு கூறுகையில், மூலப்பொருட்களின் விலைகள் சுமார் 100 சதவிதம் முதல் 200 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் தொழில்துறையினர் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றோம். உடனடியாக இந்த விலைகளை குறைக்கவும், மூலப்பொருட்கள் ஏற்றுமதியை ரத்து செய்துவிட்டு, இறக்குமதிக்கு அனுமதி அளிக்க வேண்டும். இன்று ஒருநாள் அடையாள போராட்டத்தை நடத்துகிறோம். ஒன்றிய அரசு தங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டம் தீவிரப்படுத்தப்படும். இந்த போராட்டம் காரணமாக நாடு முழுவதும் ஒரே நாளில் 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். 

 

;