நாகப்பட்டினம், அக. 8- தொகுப்பூதியம், மதிப்பூதியம், புற ஆதாரமுறை மற்றும் ஒப்பந்தமுறை நியமனங்களை ரத்து செய்து, காலமுறை ஊதியத்தில் நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆக. 8 (வெள்ளிக்கிழமை) நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமைதாங்கினார். மாவட்டச் செயலாளர் த.ஸ்ரீதர் விளக்கவுரையாற்றினார். முன்னாள் மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன்சேரல் நன்றி கூறினார். நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி பள்ளி, வட்டாட்சியர் அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் நீதிமன்ற வளாகம் ஆகிய இடங்களிலிலும், திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.