விடுமுறையையொட்டி 175 சிறப்பு பேருந்துகள் இயக்கம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் தகவல்
கும்பகோணம், டிச.1- விடுமுறை தினத்தையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சார்பில் 175 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என்று மேலாண் இயக்குநர் மோகன் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது: கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் டிச.2 (சனிக்கிழமை), டிச.3 (ஞாயிற் றுக்கிழமை) வார விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாட்களையொட்டி, பொது மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக் கோட்டை, காரைக்குடி, இராமநாத புரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையி லிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட் டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத் துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கும் 100 சிறப்பு பேருந்து கள் இயக்கப்படுகின்றன. திருச்சியிலிருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக் கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக் கும், திருச்சியிலிருந்து புதுக் கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம் வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 75 பேருந்துகளும் என மொத்தம் 175 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வுள்ளன. விடுமுறைக்கு வந்த பயணிகள் திரும்ப ஊருக்குச் செல்ல டிச.3, 4 தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 100 சிறப்பு பேருந்துகளையும், பிற தடங்களில் 75 சிறப்பு பேருந்துகளையும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பயணிகள் திரும்பச் செல்ல ஞாயிறு, திங்கட்கிழமைகளில் திருச் சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையும், பெரம்பலூர், ஜெயங் கொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையும், புதுக்கோட்டை, நாகப் பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலா டுதுறை, வேளாங்கண்ணி, கும்ப கோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென் னைக்கு இரவு 10 மணி வரையும், இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு பேருந்துகள் 9.30 மணி வரையும் பயணிகள் பயன்பாட் டுக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ரயில்வே பெண் ஊழியரிடம் நகை பறித்தவர் கைது
கும்பகோணம், டிச.1- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா அண்ணலக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா (38). இவர் கும்பகோணம் மாதுளம் பேட்டை ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணி யாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு அந்த வழி யாக வந்த ரயிலுக்காக கேட்டை அடைத்து விட்டு, ரயில் கடந்து சென்ற பின் திறந்தார். பின்னர் கேட் கீப்பர்களுக்கு என ஒதுக்கப்பட் டுள்ள ஓய்வு அறையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் ஓய்வு அறையின் உள்ளே நுழைந்ததில், அதிர்ச்சியடைந்த சரண்யா வெளி நபர்கள் உள்ளே வரக்கூடாது எனக் கூறியுள்ளார். அப்போது, அந்த நபர் சரண்யா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு, அங்கி ருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சரண்யா கும்பகோணம் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் பகுதியைச் சேர்ந்த சாலமன் (36) என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்த 7 பவுன் சங்கி லியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு காப்பீடு நிறுவனம் ரூ.3.27 லட்சம் வழங்க உத்தரவு
அரியலூர், டிச.1- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் அருகே கொரோனாவால் பாதிக்கப் பட்ட தம்பதிக்கு காப்பீடு தொகையுடன் சேர்த்து ரூ.3.27 லட்சம் வழங்க வேண்டு மென யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சீனி வாசா நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (75). இவர் ஓய்வுப் பெற்ற துணை ஆட்சி யர். இவரது மனைவி ராஜாமணி (67). இவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான காப்பீடு தொகை அரசால் பிடித்தம் செய் யப்பட்டு, அந்த தொகை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தம்பதி இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா வால் பாதிக்கப்பட்டு, திருச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதற்கு ரூ.2,72,170 செலவா னது. இந்த செலவுத் தொகையை திரும்ப வழங்கக் கோரி, மாநில கருவூலத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு தியாக ராஜன்-ராஜாமணி தம்பதி விண்ணப்பித் திருந்தனர். இந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட மாநில கருவூலத் துறை ஆணை யர், மேற்படி தொகையை வழங்கலாம் என்று காப்பீடு நிறுவனத்துக்கு பரிந்துரைத் தார். ஆனால் காப்பீடுத் தொகையை வழங்காமல் காலம் தாமதம் செய்து வந்த காப்பீடு நிறுவனத்தின் மீது அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில், இத்தம்பதியர் கடந்த ஜூன் மாதம் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறை தீர் ஆணையத் தலைவர் தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகி யோர் கொண்ட அமர்வு, விசாரணை மற்றும் அனைத்து ஆதாரங்கள் அடிப்படை யில், “தியாகராஜன், அவரது மனைவி ராஜாமணி ஆகியோருக்கு காப்பீடு தொகையாக ரூ.2,72,179, நஷ்ட ஈடாக ரூ.50,000, வழக்கு செலவுத் தொகையாக ரூ.5,000-ஐ ஒரு மாதத்துக்குள் காப்பீடு நிறு வனம் வழங்க வேண்டும்” என்று உத்தர விட்டனர்.
தோழர் எஸ்.சிவஞான வடிவேல் படத்திறப்பு
தஞ்சாவூர், டிச.1- தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையில், மறைந்த தோழர் எஸ்.சிவஞான வடிவேல் படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் கோ.நீலமேகம், பி.செந்தில்குமார், என்.சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலா ளர் எஸ்.கோதண்டபாணி, முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர்.பன்னீர்செல் வம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயற் குழு உறுப்பினர் ஆர்.ராஜகோபால், மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்மணி, மாவட்டத் துணைத் தலைவர் பி.பாலசுப்பிரமணியன், பூபதி, மன்னார்குடி தீக்கதிர் செய்தியாளர் பி.தெட்சிணாமூர்த்தி மற்றும் குடும்பத்தினர், உறவி னர்கள், கட்சியினர், அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
வாய்க்காலில் மிதந்து வந்த செயற்கை எலும்புக்கூடு
தஞ்சாவூர், டிச.1 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், பாளையம் பகுதி வழியாக கல்லணைக் கால்வாய் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் மனித எலும்புக்கூடு ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் பாலசுப்பரமணியம், உதவி ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்ட காவல்துறையினர் அந்த இடத்தில் குவிந்தனர். பின்னர், அந்த எலும்பு கூட்டை காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த எலும்பு கூடின் கழுத்து மற்றும் தலைப் பகுதி, தாடைப் பகுதி, கை மூட்டு பகுதி ஆகியவை இரும்பா லான ஸ்பிரிங் கம்பியால் இணைக்கப்பட்டு இருந்தது. மேலும், அது பள்ளி அறிவியல் ஆய்வு கூடங்களில் பயன்ப டுத்தப்பட்டு வரும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட எலும்புக் கூடு என்பது தெரிய வந்தது. இந்த விவகாரம் பட்டுக்கோட்டை நகர்ப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆற்றில் மிதந்து வந்தது மனித எலும்புக்கூடு அல்ல; செயற்கையானது என தெரிந்த தால் அது நகைச்சுவையாக மாறியது. இருப்பினும், காவல் துறையினர் எலும்புக்கூட்டை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
என்.ஆர். ஐஏஎஸ் அகாடமியில் தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி, டிச.1 - திருச்சி ராம்ஜி நகர் கே.கள்ளிக்குடியில் என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இங்கு ஒன்றிய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை உருவாக்கி கிராமப்புற இளைஞர்களுக்கு மேற்கண்ட நிறுவனம் வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் “தமிழ்” என்ற தலைப்பில் சொற்பொ ழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் யுகபாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களிடையே தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் ஏற்படுத்தும் விதமாக உரையாற்றி னார். நிகழ்ச்சிக்கு என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி தலைவர் ஆர்.விஜ யாலயன் தலைமை வகித்தார். கல்வியாளர்கள், மாணவ-மாணவி கள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் சுமை தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலைநிறுத்தம்
திருச்சிராப்பள்ளி, டிச.1- திருச்சி டாஸ்மாக் குடோனில் வேலை செய்து வரும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கடந்த 2020 செப்டம்பர் மாதம் கூலி உயர்வு வழங்கப்பட்டது. அதன்பின் இதுவரை கூலி உயர்வு வழங்கவில்லை. கூலி உயர்வு கேட்டதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வழங்கப்படும் என தெரி விக்கப்பட்டது. ஆனால் 6 மாதங்களாகியும் பேச்சுவார்த்தை நடத்த வில்லை. நிறுவனத்திடம் கேட்டால் உற்பத்தியாளர்கள் விலை உயர்த்தி னால்தான் கூலி உயர்வு வழங்க முடியும் என தெரிவிக்கின்றனர். அமைச்சர் கூலியை உயர்த்தி வழங்கச் சொல்லியும் வழங்கவில்லை. இதையடுத்து மாநில சம்மேளன முடிவின்படி பீர் பாட்டில், லிக்கர் பாட்டில்களுக்கு ரூ.8-ம், பெட்டிக்குள் பெட்டிக்கு ரூ.9-ம் வழங்கக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருச்சி குடோனில் 40-க்கும் மேற்பட்ட லாரிகளில் மதுபானங்கள் இறக்கப் படாமல் உள்ளன.
மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை, டிச.1 - முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் புதிய பயனாளிகளை சேர்ப்பதற்கான முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவிக்கையில், 2.12.2023 அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலங்குடியை அடுத்த கொத்தக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பொன்னமராவதி பொன் புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, விடுபட்ட குடும்பத்தினரை இணைப்பதற்கான இம்முகாமில் பயனாளிகள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் நகல்களுடன் வந்து பயனடைய வேண்டும்” என்றார்.
காவல்துறை மனுநீதி சிறப்பு முகாம்
கும்பகோணம், டிச.1- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருவிடைமருதூர், நாச்சியார்கோவில், திருப் பனந்தாள், பந்தநல்லூர், திருநீலக்குடி, சோழபுரம் உட்கோட்ட காவல் துறை சார்பில் வெள்ளியன்று மனுநீதி சிறப்பு முகாம் நடைபெற்றது. காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷ்த் ராவத் தலைமை வகித்தார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக், ஆய்வாளர்கள் ராஜேஷ், ரேகாராணி, சர்மிளா, சோமசுந்தரம் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவியாளர், தலைமை காவ லர்கள் கலந்து கொண்டனர். ஆறு காவல் நிலையங்களில் பல நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த மனுக்கள் மீதான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் நிலப்பிரச்சனை, வழித்தடப் பிரச் சினை, பணம் கொடுக்கல் - வாங்கல் பிரச்சனை, குடும்பப் பிரச்சனை, முன் விரோத பிரச்சனை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. முடியாத மனுக்கள், நீதி மன்றம் செல்ல வழிவகை செய்யப்பட்டது. தொடர்ந்து, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. விசாரணைக்கு பின், 53 மனுக்களுக்கு உடனே தீர்வு காணப்பட்டது.
சுற்றுலா தொழில் சார்ந்தோர் பதிவு செய்ய அறிவுறுத்தல்
கரூர், டிச.1 - உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலாப் பயண வழிகாட்டிகள், பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து ஆப ரேட்டர்கள் ஆகியோர் பதிவு செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறை கள் வெளியிடப்பட்டுள்ளன. சுற்றுலா தொழில் சார்ந்த ஆபரேட்டர்களுக்கான வழிகாட்டுதல் கள் மற்றும் பதிவு போர்ட்டலின் நகலினை www.tntourismtors.com என்ற இணையதளம் மூலம் பெறலாம். தமிழகத்தில் சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறையான உரிமம் இல்லாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர். சுற்றுலா தொழில் சார்ந்த ஆபரேட்டர்கள் அரசாணையில் உள்ள வழிகாட்டுதல்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும். சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறையான உரிமம் இல்லாமல் சுற்றுலா சார்ந்த தொழில் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறையில் சுற்றுலா தொழில் சார்ந்த ஆபரேட்டர்கள் பதிவு செய்வதற்கான இணைய தளம் மற்றும் தொடர்பு அலுவலக விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சுற்றுலா அலுவலகம், கரூர் என்ற முகவரியின் அலுவலக தொலைபேசி எண். 04324-256257 மற்றும் 9789630118 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது karurtourism2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி யிலோ தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரி வித்துள்ளார்.
கூடுதல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
அரியலூர், டிச.1- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் நகராட்சி சாதாரணக் குழு கூட்டம் நகர் மன்ற தலைவர் சுமதி சிவக்குமார் தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் 6-வது வார்டு கவுன்சி லர் செல்வராஜ் - ஜெயங்கொண்டம் கடைவீதி யில் பொதுக் கழிப்பறை கட்ட வேண்டும். அதற்கு நகராட்சிக்குட்பட்ட 4 ரோடு அருகே உள்ள அம்மா மருந்தகம் அருகிலும், விருத்தாச்சலம் ரோடு மீன் மார்க்கெட் அருகிலும் இலவச பொது கழிப்பறை கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 2 -வது வார்டு கவுன்சிலர் மனோன்மணி தே வேந்திரன் - மகிமைபுரம் பள்ளி முதல் மாடர்ன் கல்லூரி வரை பைப் லைன் அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சாலை வசதி இல்லாத இடங்களில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். சௌந்தரபாண்டி நகரில் மின் கம்பம் வீட்டின் மீது விழுவது போல் உள்ளது. அதை மாற்றியமைக்க வேண்டும். சாலை யில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப் படுத்த வேண்டும். 23-வது வார்டு கவுன்சிலர் துர்கா ஆனந்த் - ஜெயங்கொண்டம் பொன்நகர் சாலையை செப்பனிட வேண்டும். வேலாயுதநகர் பகுதி யில் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடை களை அப்புறப்படுத்த வேண்டும். 17-வது வார்டு ஜோதி - சின்னவளையம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி படிக்கட்டுகள் உடைந்து கிடப்பதை சரி செய்ய வேண்டும். குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால், கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றை கட்ட வேண்டும். சின்னவளையம் அரங்க னேரியை தூய்மைப்படுத்தி தூர்வார வேண்டும். 11-வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியன் - செங்குந்தபுரம் பகுதியில் 35 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு குடிநீர் வசதி ஏற்படுத்த 600 மீட்டர் பைப் லைன் போட அனுமதி வழங்கி யும், இதுவரை பணி நடைபெறாமல் உள்ளது. அந்தப் பணியினை விரைந்து முடித்து உடனே குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். செங்குந்த புரம் மெயின் ரோட்டில் உள்ள கீழண்ட ஏரி யில் படர்ந்து கிடக்கும் தாமரை உள்ளிட்ட செடி களை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும். 3-வது வார்டு கவுன்சிலர் ரங்கநாதன் - கீழக்குடியிருப்பு பகுதியில் உள்ள பள்ளிக்கு சமையல் கூடம், பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும். கொம்மேட்டு பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கீழக்குடியிருப்பு தரைப் பாலத்தை சரிசெய்ய வேண்டும். பூங்கா விற்கு மின்விளக்கு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
விவசாய நிலம் வாங்க ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தாட்கோ மானிய கடன் வழங்கல்
தஞ்சாவூர், டிச.1- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர் குறைந்த வட்டியில் கடன் பெற்று விவசாய நிலம் வாங்கலாம் என தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)) மூலமாக விவசாயத் தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரயத் தொகையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக வழங்கப்படுகிறது. நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்கள், சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு, அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல், மானியத்தொகை போக, எஞ்சிய கிரயத் தொகையை, தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக் கழக நிதியிலிருந்து 6 சதவீதம் மிகக் குறைந்த வட்டியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் தாட்கோ இணையதள முகவரியில் http://www.tahdco.com/ விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று, உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்”என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை, புதுக்கோட்டை 04322-221487 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி துவக்கம்
புதுக்கோட்டை, டிச.1 - தமிழ்நாடு ‘உரிமைகள்’ திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகள் குறித்த சமூக தரவுகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வியாழக்கிழமை துவக்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்தான சமூக தரவுகள் கணக்கெடுப்பு குறித்து அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தெரிந்து கொள் ளும் வகையில், மாற்றுத்திறனாளிகள் அனைவரிட மும் சமூக தரவுகள் பதிவில் பங்கேற்கும் ஆர்வத்தை உரு வாக்கிட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுடன் தொடர் பில் உள்ள நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பொது மக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அதற் கான விழிப்புணர்வு செயலியை வெளியிட்டும் துவக்கி வைக்கப்பட்டது. இக்கணக்கெடுப்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வா தார இயக்கக் களப்பணியாளர்களும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்களும் என 557 பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள் ளது. இக்கணக்கெடுப்பு பணிகளை மாற்றுத்திற னாளிகளின் வீட்டிற்கு நேரடியாக வந்து மேற்கொள்ள உள்ளனர்” என்றார்.
மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் வெளியில் இருந்து கொண்டு வந்து மீன் விற்பனை செய்பவர்கள் மீது புகார்
தஞ்சாவூர், டிச.1- மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் வெளியிலிருந்து மீன்களை கொண்டு வந்து விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை யில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாட்டுப்படகு, விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினம் வடக்கு பாரம்பரிய மீனவர் நல சங்க அலுவலகத்தில் விசைப் படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற் றது. தமிழ்நாடு மீனவர் பேரவை தஞ்சை மாவட்டச் செயலாளர் வடுகநாதன் தலைமை வகித்தார். விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் இளங்கோ, பாரம்பரிய மீனவர் நலச் சங்க செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், “விசைப்படகு, நாட்டுப்படகு கள் மல்லிப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மீன் பிடித்தொழிலுக்கு சென்று பிடித்து வரும் நண்டு, இறால், மீன்களைத் தவிர வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வந்தும் துறைமுகப் பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், துறைமுக வளாகத்தில் தரம் இல்லாத பார்மாலின் கலந்த மீன்கள் விற்பனையா கின்றன. இது சுகாதார சீர்கேட்டையும், நோய் பரவும் அபாயத்தையும் ஏற்படுத்து கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, வெளி யிலிருந்து மீன்களை கொண்டு வந்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் புகார் செய்வது, தரமற்ற-சுகாதாரமற்ற மீன்களை கொண்டு வந்து துறைமுகத்தில் விற்பனை செய்ப வர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 6 பேர் கொண்ட கண்கா ணிப்பு குழு அமைப்பது, மல்லிப்பட்டினம் கடற்கரை பகுதிகளிலும், கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளிலும் மாடுகள் வளர்ப்பவர் களால் துறைமுக பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மாடுகள் சாலையில் படுத்து போக்கு வரத்திற்கு இடையூறாகவும், அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலை யும் உள்ளது. தற்போது முதல் ஏப்ரல் மாதம் வரை பனிக் காலமாக இருப்பதா லும், தஞ்சாவூர் மாவட்ட கடல் பகுதி, இலங்கை கடல் பகுதிக்கு அருகே இருப்பதா லும் தூரக்கடல் சென்று மீன்பிடி தொழில் செய்ய முடியாது. காலங் காலமாக கோடியக்கரைக்கு தெற்கே முத்துப்பேட்டை முதல் கோடியக் கரை வரை உள்ள சதுப்பு நில காட்டுப் பகுதிக்கு நேர் கிழக்கே 4.5 முதல் 5 பாகம் வரை மீன்பிடித்து வருகின்றனர். இவர்களை கடந்த சில மாதங்களாக மீன்வளத் துறையி னர் தண்டிப்பதும், தொழில் முடக்கம் செய்வதும் வாழ்வாதாரத்தை இழக்க செய்யும். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல், விசைப்படகு மீனவர்களை வழக்கமாக மீன்பிடிக்கும் இடத்தில், மீன்பிடிக்க மீன்வளத்துறை அனுமதிக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்களை அரசின் கவ னத்திற்கு கொண்டு செல்லவும், மீன்வளத் துறை துறை மூலம் நடவடிக்கை எடுக்க ஆட்சியரைச் சந்தித்து முறையிடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.