districts

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்க!

புதுச்சேரி, செப்.4- சிபிஎஸ்இ பாடதிட்டத்தால் மாணவர்களுக்கு எற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியை கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர்  முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. அறிமுகம்   கடந்த காலங்களில் புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் மாநில சமச்சீர் கல்வியும், தனி யார் பள்ளிகளில் மெட்ரிகுலேஷன் பாடத்திட்டமும் நடைமுறை யில் இருந்தன. ஒரு பகுதி பெற்றோர்களுக்கு, "மெட்ரிகுலேஷன் சிறந்த கல்வி திட்டம்" என்ற மனப்பான்மை இருந்ததால் அவர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து வந்தனர். பெரும்பாலான கிராமப்புற ஏழை மாண வர்கள் அரசு பள்ளிகளையே நம்பி இருந்தனர். புதுச்சேரி, காரைக்கால் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டதை பின்பற்றி வந்தது. தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் திட்டம் முடிவுக்கு வந்து, சமச்சீர் கல்வி அமலாகியதும், புதுச்சேரியும் அதையே பின்பற்றியது. இருப்பினும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் ஒன்றிய அரசின் திட்டமான சி.பி.எஸ்.இ. நடைமுறையில் இருந்தது. 2025-26,நடப்புக் கல்வியாண்டில், சி.பி.எஸ்.இ. தேர்வு முறைகளாலும், பாடத்திட்டத்தாலும் பிரச்சனைகள் உருவாகி இருக்கின்றன. எனவே மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு,  உடனடியாக தீர்வு காண, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது.   பா.ஜ.க.- என். ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு மாநில உரிமையை விட்டுக் கொடுத்து, ஒன்றியக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை அரசுப் பள்ளிகளில் முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளது. மக்கள் கருத்தறியாமல்,  சி.பி.எஸ்.இ. கல்வி முறைத் திணிப்பை, சிபிஎம் கடுமையாக ஆட்சேபிக்கிறது.   சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் திணிக்கப்பட்டதால் 2023 -24இல் 10054 மாணவர்கள் பள்ளிக்கல்வியிலிருந்து விலகி உள்ள னர். இந்த இடைநிற்றல் பெரும் அதிர்ச்சி அளிப்பதுடன், மாநிலத்தின் முன்னேற்றத்தை கடுமையாக பாதித்திடும். கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களே பெற்றுள்ளனர். இதன் விளைவு அரசு பள்ளி மாணவர்களால் பொறியியல் மற்றும் கலை - அறி வியல் கல்லூரிகளில் உயர் கல்விக்காக போட்டியிட முடிய வில்லை மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.  

சி.பி.எஸ்.இ. விதிமுறைகள்   புதுவை அரசின் கல்வித் துறை சி.பி.எஸ்.இ. யை நடைமுறைப்படுத்தும் போது வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தவில்லை. கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளின் வகுப்பறை வசதிகள் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் இல்லை. மேலும் விளையாட்டு திடல் கழிப்பறை வசதிகள், இருந்தாலும் சுத்தம் செய்ய பணி யாளர்கள், விளையாட்டு மைதானங்கள், ஆய்வகங்கள் அறி வியல் உபகரணங்கள் ஆகியவை கல்வி கற்கும் சூழலில் மிகவும் முக்கியமானது. இசை, கைவினை, உடற்பயிற்சி அனைத்திற்கும் தகுதி பெற்ற ஆசிரியர்கள், தேவையான பயிற்சிப் பொருட்களுடன் பள்ளிகள் இருக்க வேண்டும்.இவை கள் அனைத்தும் சிபிஎஸ்இ வழிகாட்டு நெறிமுறைகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. புதுவை அரசுப் பள்ளிகளில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.   புதுவை அரசுப் பள்ளி ஆசிரியர்கள்   ஏற்கெனவே ஆசிரியர் பற்றாக்குறை யால் அரசுப் பள்ளிகள் திணறிக் கொண்டிருக்கிறது.எண்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கல்வி சாராத பணி களுக்கு மாற்றப்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. ஒரே ஆசிரியர் இரண்டு பள்ளிகளுக்கு சென்று பாடம் எடுக்கிறார். மாணவர்களின் சேர்க்கை, தேர்வு விகிதாசாரம் ஆகிய வற்றால் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் கல்வி யில் மிக முக்கியமான அம்சமான ஆசிரியர்களின் பங்களிப்பு நிராகரிக்கப் படுகிறது.அவரகள் நிர்பந்திக்கப்பட்டு நடந்த பயிற்சி வகுப்புகளில், உள்நோக்கங்களோடு எவ்வித அனு பவங்களும் இல்லாதவர்களால், சடங்கு முறையிலேயே பயிற்சி அளிக்கப்பட்டது. ஒரு தலைமுறை மாணவர்களின் எதிர்காலம், புதுவை அரசின் கல்வித் துறையால் கேள்விக்குறியாகியுள்ளது.  சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்திய புதுவை அரசின் கல்வித் துறை தன்னை நியாயப்படுத்திக் கொள்ள, எப்படியாவது 13 மதிப்பெண்களை அளித்து தேர்வு விகிதாச்சாரத்தை சமன்படுத்த முயற்சி செய்திருக்கிறது. இதன் விளைவு 2024-25 ஆம் ஆண்டு மாணவர்களின் எதிர்காலம் இருளில் தள்ளப்பட்டிருக்கிறது என்று சிபிஎம் கருதுகிறது.  இவ்வாறு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளை எப்படி சந்திப்பார்கள்?

இப்பிரச்சனைக்கு தீர்வுகாண கட்சி வலியுறுத்தும் கோரிக்கைகள்   

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம், தேர்வுகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு கல்வித் துறை பொறுப்பேற்க வேண்டும். விரும்பக்கூடிய அனைத்துஅரசுப் பள்ளி மாணவர்களுக்கும் உயர் கல்வி கற்க வாய்ப்புகள் உரு வாக்கப்பட வேண்டும்.   •தனியார் பள்ளிகளில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்திற்கும் -சி.பி.எஸ்.இ. திட்டத்திற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அரசுப் பள்ளிகளிலும், மாநில சமச்சீர் கல்வி திட்டத்திற்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கும் சம வாய்ப்புகள் அளிப்பது அவசியமாகும். அதற்குரிய நடவடிக்கையை உடனடியாக  புதுவை அரசு மேற்கொள்ள வேண்டும்.   ஆசிரியப் பணியிடங்கள் பற்றாக்குறையை உடனடியாக போக்கிட வேண்டும்.கல்வி சாராப் பணிகளில்  ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ஆசிரியர்களை உடனடியாக கல்விப் பணிகளுக்கு மாற்றிட வேண்டும்.   புதுச்சேரி  அரசு -தனியார் பள்ளி நிறுவனங்கள் அனைத்திலும் தாய்மொழி ஒரு பாடமாகவும், தாய் மொழி வழிக்கல்வியும் அவசியம் இருக்க வேண்டும். புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் மொழி  இல்லாத பாடத்திட்டம் என்பது இருக்கக் கூடாது. புதுச்சேரி சமூக, வரலாறு பாடங்களும் இணைக்கப்படுவது காலத்தின் தேவையாகும்.   புதிய  பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும்போது தரமான ஆசிரியர்களை கொண்ட பயிற்சி வகுப்புகள் இன்றியமையாதது. அடிப்படை வசதிகள் கல்வி உரிமைகளை வலியுறுத்திய, இலவசக் கல்வி உரிமைச் சட்டம் 2009ஐ புதுச்சேரியில் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.  தேசிய கல்விக் கொள்கையால், புதுச்சேரியில் உயர் கல்வி கற்பதற்கான கலை -அறிவியல் பட்டப்படிப்புகள் 4 ஆண்டுகளாக இருப்பதால், புதுச்சேரி மாநில மாண வர்கள் அண்டை மாநிலங்களை நோக்கிச் சென்று கொண்டி ருக்கிறார்கள். உயர்கல்வி சேர்க்கை பின்தங்கி வருகிறது. இதை தடுக்க புதுவை அரசு வழிவகை செய்ய வேண்டும்.   நாட்டி லேயே உயர் கல்வியின் முன்மாதிரியான இடத்தை பெற்றி ருந்த புதுச்சேரி தற்போது சரியத் தொடங்கி இருக்கிறது. இதை தடுத்து நிறுத்த முதல்வர் அவர்களும், உயர்கல்வி அமைச்சர் அவர்களும், கல்வித்துறையும் உரிய நடவடிக்கை எடுத்திடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.   இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.