கும்பகோணம், பிப்.26- கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு, கும்பகோணம் ஐயப்பன் நகரில் மாணவர் விடுதி அமைக்கப்பட்டு இருந்தது. இது, அடிப்படை வசதிகள் இல்லாமலும் மிகவும் பழமை அடைந்து மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி மிகுந்த சிரமத்திற்கு மாணவர்கள் உள்ளானார்கள். இதனை சம்பந்தப்பட்ட கல்லூரி மற்றும் அலுவலர்களை சந்தித்து இந்திய மாணவர் சங்கம் முறையிட்டது. இருப்பினும், காலதாமதம் அடைந்ததால் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, விவரமாக தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள், மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக ஒரு இடத்தை தங்க வைத்தனர். ஆனாலும் அது போதிய வசதி இல்லாததால் உடனடியாக அரசுக்கு சொந்தமான மாணவர் விடுதியை புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதன் தொடர்ச்சியாக கும்பகோணம் ஐயப்பன் நகரில் உள்ள மாணவர் விடுதியை புனரமைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். இது சம்பந்தமாக இந்திய மாணவர் சங்கத்தினர் மாணவர்களின் நலன் கருதி துரிதமாக செயல்பட்ட கல்லூரி நிர்வாகம் மற்றும் துறை வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கும் மாணவர்களின் அடிப்படைக் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற தீக்கதிர் நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.