districts

img

மகாராஜா பாரா மெடிக்கல் கல்லூரி உரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா? கல்லூரி மாணவிகள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கிணத்துகடவு பகுதியில் உள்ள மகாராஜா பாரா மெடிக்கல் கல்லூரி, உரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே மகாராஜா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் என்ற பெயரில் பாரா மெடிக்கல் கல்லூரி இயங்கி வருகின்றது. இந்த கல்லூரி உரிய அங்கீகாரம் பெற்று இருக்கின்றதா என்ற சந்தேகம் அந்த கல்லூரியில் படிக்கும்  மாணவிகளுக்கு எழுந்த நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் கல்லூரி உரிய அங்கீகாரம் பெற்று இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கேட்டு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அமைப்பினருடன் சேர்ந்து வந்து மனு அளித்தனர்.

பின்னர் பேசிய அவர்கள், தங்கள் கல்லூரி ராஜஸ்தான் சன்ரைஸ் யுனிவர்சிட்டி அங்கீகாரம் பெற்றது எனக்கூறி கல்லூரி அடையாள அட்டை கொடுத்தார்கள் எனவும் , ஆனால் ராஜஸ்தானில் உள்ள அந்த பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு கேட்டால் தங்களுக்கு தென் மாநிலத்தில் கல்லூரிகள் எதுவும் கிடையாது என தெரிவிப்பதாக மாணவர்கள் கூறினர். யுஜிசி- யை தொடர்பு கொண்டு கேட்டால் இந்த கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லை என சொல்வதாகவும், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதாக உணர்வதாகவும் மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.

மூன்றாம் ஆண்டு படிக்க போகும் மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் ரிசல்டை தவிர வேறு ரிசல்ட் இன்னும் வரவில்லை என தெரிவிக்கும் மாணவர் சங்க நிர்வாகிகள் மாணவர்களின் அறியாமையை பயப்படுத்தி ஏமாற்றபட்டு இருப்பதாகவும், அங்கீகாரம் இல்லாத கல்லூரியில் படித்து என்ன செய்ய முடியும் எனவும் கேள்வி எழுப்பினர்.

கல்லூரி நிர்வாகிகள் என ஒருவரை கூட மாணவர்கள் பார்த்தது இல்லை எனவும், கல்லூரியில் முதல்வர் உட்பட  8 பேர் மட்டுமே பணிபுரிவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி , மாணவர்கள் வேறு கல்லூரியில் படிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் கல்வி கட்டணத்தையும் பெற்றுக் கொடுக்க  வேண்டும் எனவும் தெரிவித்தனர்.