districts

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி காத்திருப்பு போராட்டம் வெற்றி

கரூர், செப். 4-  கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், சிவாய ஊராட்சிக்குட்பட்ட குப்பாச்சிபட்டி கிராமத்தில் கிராம கோவில் திருவிழாவில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த 11 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து வரி வாங்காமல் கோவிலில் சாமி கும்பிட அனுமதிக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்து அராஜகம் செய்து வந்தனர்.  அராஜகம் செய்து வந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கண்டித்தும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் வியாழனன்று, குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கிருஷ்ணராயபுரம் வருவாய் வட்டாட்சியர் அழைத்தார். அதில், பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், ஆதிக்கம் செலுத்தும் தரப்பினரையும், விசாரித்து பாதிக்கப்பட்ட 11 குடும்பத்தினரிடம் வரிப்பணம் வாங்க வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் ஒன்றாக இணைத்து திருவிழாவை நடத்த வேண்டும். அப்படி நடத்தவில்லை என்றால் வரி வாங்க மறுப்பவர்கள் மீதும், ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. அதன் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு, அனைவரும் ஒன்றாக சேர்ந்து திருவிழா நடத்துவோம். அவர்களிடம் எந்தவித பாகுபாடும் காட்டமாட்டோம் என எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்தனர். அதன் அடிப்படையில் போராட்டத்தின் கோரிக்கைகள் வெற்றி பெற்றது.  இதில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கரூர் மாவட்டச் செயலாளர் இரா. முத்துச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜு, கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளர் ஜி.தர்மலிங்கம், விதொச மாவட்டத் தலைவர் கண்ணதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.