districts

சென்னையில் நாளை விநாயகர் சிலைகள் கரைப்பு

சென்னை,செப்.13- சென்னையில் 1,500 விநாயகர் சிலைகள் கடந்த 7-ந்தேதி  வைக்கப்பட்டன. இந்த சிலைகளில் ஒரு பகுதி கடந்த 11-ந்தேதி ஊர்வலமாக  எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நாளை  விநாயகர் சிலைகள் அதிக எண்ணிக்கையில் கரைக்கப்பட உள்ளன. ஞாயிற்றுக்கிழமை அன்று 1,300 சிலைகளுடன் ஊர்வலம்  நடைபெறுகிறது. அன்றைய தினம் சிலைகளை கரைப்பதற்கு  கடைசி நாள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றி யூர் ஆகிய 4 இடங்களில் சென்னை மாநகரில் வைக்கப் பட்டுள்ள சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட 17 வழித்தடங்களின் வழியாக மட்டுமே எடுத்துச் சென்று கரைக்க  வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். விநாயகர் ஊர்வலம் செல்லும் வழிகளில் உள்ள மசூதி மற்றும் கிருஸ்துவ தேவாலயங்களில் கூடுதல் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.