அம்பத்தூர், மே. 5- பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை நள்ளிரவு உயர் அழுத்த மின்மாற்றியில் ஏற்பட்ட கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது. தமிழ்நாடு முழுவதும் தற்போது கோடை வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. இதனால் பலர் வெளியே செல்லாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் அனைத்து வீடுகளிலும் ஏசி, மின்விசிறி, பிரிஜ் போன்ற பல்வேறு மின்சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், தற்போது மின்தேவையும் அதி கரித்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக, அந்தந்தப் பகுதிகளில் உள்ள பழைய மின்மாற்றிகள் பழதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆவடி அடுத்த பட்டாபிராம் சேக்காடு பகுதி யில் 110 கிலோவாட் திறன் கொண்ட துணை மின்நிலை யம் இயங்கி வருகிறது. இங்குள்ள ஒரு உயர் அழுத்த மின்மாற்றியில் சனிக்கிழமை நள்ளிரவு திடீரென குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஆயில் கசிவு ஏற்பட்டதில், அந்த பழைய மின்மாற்றி திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி, பூந்தமல்லி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடு பட்டனர். அப்பகுதி முழுவதிலும் கரும்புகை சூழ்ந்ததால் வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் பட்டாபிராம், சேக்காடு, தண்டுரை, கக்கன்ஜி நகர், கோபாலபுரம், காமராஜர் நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் சம்பந்தப்பட்ட மின் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பட்டாபிராம் பகுதியில் புதிய மின்மாற்றிகள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், சேக்காடு துணை மின் நிலையத்தில் 30ஆயிரம் மின் நுகர்வோர் இருக்கின்றனர். முதற்கட்டமாக அருகாமையில் இருக்கக்கூடிய துணை மின் நிலையத்திலிருந்து தற்காலிக மின் சேவை வழங்க ஏற்பாடு செய்கிறோம். பின்னர் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்து சீரமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு மீண்டும் மின் சேவை வழங்க வழிவகை செய்யப்படும் என்றனர். கோடை காலத்தில் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக மின்சாரம் சேவை பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகினர்.