பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்தும், இனவெறி இஸ்ரேலை ஆதரிக்கும் மோடி அரசைக் கண்டித்தும் சிஐடியு, இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை (அக். 21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சு.லெனின்சுந்தர், எல்.பி.சரவணத்தமிழன், எஸ்.பாக்கியலட்சுமி, எம்.நித்திஷ்குமார், கு.சுரேஷ்குமார் ஆகியோர் பேசினர்.
இஸ்ரேல் நடத்தி வரும் போரால் உயிரிழந்த பாலஸ்தீனர்களுக்கு இரங்கல் தெரிவித்து வெள்ளியன்று (அக்.20) அண்ணாசாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். சேப்பாக்கம் பகுதி ஒருங்கிணைப்புக் குழு தலைவர் குணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன், பொருளாளர் ஜெ.பார்த்திபன், துணைச்செயலாளர் பிரியதர்ஷினி எம்.சி., உள்ளிட்டோர் பேசினர்.
காஸா பகுதியில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீதான தகவல்களை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட குழு சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் பகுதி செயலாளர் கே.வேலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், வி.அரிகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் க.ஜெயந்தி, பாட்டாளி வர்க்க சமரன் அணி மாநில அமைப்பாளர் மணி, மக்கா ஜமாத் நிர்வாகி இமாம் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் போரை நிறுத்த வலியுறுத்தி வெள்ளியன்று (அக்.20) தரமணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, வேளச்சேரி பகுதி நிர்வாகி குமரன் உள்ளிட்டோர் பேசினர்.