districts

மூளை புற்றுநோய் அறுவை சிகிச்சையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சாதனை

புதுக்கோட்டை, ஏப்.25 -55 வயதுடைய பொன்னம்மாள் என்பவர் ஆவுடையார்கோவில் மேல 2-ம் வீதியை சேர்ந்தவர். இவருக்கு தலைவலியும் கண்பார்வை குறைபாடும் இருந்த காரணத்தால் புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 30-ம் தேதிஅனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் இடது பக்க மூளையில் புற்றுநோய் கட்டி காணப்பட்டது.அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டு ஏப்ரல் 13-ம் தேதி அவருக்கு அறுவைசிகிச்சை நடைபெற்றது. தலைமை மயக்க மருத்துவர்கள் எம்.ரவிக்குமார் மற்றும் சரவணன், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மரு.ஸ்டாலின் ராஜ்குமார் மற்றும் உதவி மருத்துவர் மரு.பாரதிராஜா, செவிலியர் ஜெயமேரி பெல்சிதாஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சையின் போது இடது பக்க மூளையின் முன்பகுதி மற்றும் நடுபகுதியில் இருந்த புற்றுநோய் கட்டி வலது பக்க மூளையை அழுத்தி கொண்டிருப்பது தெரியவந்தது. மிகவும் கடின முயற்சிக்கு பின்அக்கட்டி அகற்றப்பட்டது. இச்சிகிச்சையின்போது நோயாளி பொன்னம்மாளுக்கு 4 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது. அகற்றப்பட்ட கட்டி திசு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நோயாளி முழு ஆரோக்கியத்துடன் வியாழக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இந்த மருத்துவ குழுவை புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மரு. அழ.மீனாட்சிசுந்தரம் பாராட்டினார்.தனியார் மருத்துவமனைகளில் ரூ.2.50 லட்சம் வரை செலவாகும். இந்தஅறுவை சிகிச்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

;