சந்திராயன் 2 பின்னடைவால் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என்று இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், காரமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் மாணவ, மாணவிகளிடம் உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மயில்சாமி அண்ணாதுரை, நாம் இருமுறை நிலவுக்கு விண்கலங்களை அனுப்பி வெற்றி பெற்றுள்ளோம். நாம் இறுதியாக அனுப்பிய சந்திராயன் 2 திட்டமும் வெற்றிதான். அதன் இறுதிக்கட்ட பணியில் மட்டுமே பின்னடைவு ஏற்பட்டது. இந்த பின்னடைவால் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் முதலில் ஆளில்லா விண்கலம் அனுப்பி சோதிக்கப்படும். அதன் பின்னரே மனிதனை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். மேலும் நமது அடுத்தகட்ட இலக்குக்கான ஆராய்ச்சிகள் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.