districts

img

மறுசீரமைப்பு என்ற பெயரில் நெடுஞ்சாலைத்துறையில் பணியிடங்களை குறைக்கக் கூடாது மாநில பிரதிநிதித்துவ பேரவை கோரிக்கை

விருதுநகர், செப்.22- மறுசீரமைப்பு என்ற பெயரில் நெடுஞ்சாலைத்துறையில் பணியிடங்களை குறைக்கக் கூடாது என்று தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் சங்கத்தின் மாநில பிரதிநிதிதுத்துவ பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. 

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்கத்தின் 5 ஆவது மாநில பிரதிநிதித்துவ பேரவை விருதுநகரில் ஞாயிறன்று நடைபெற்றது.  இப்பேரவைக்கு மாநிலத் தலைவர் ஜெ.மணிகண்டன் தலைமை வகித்தார். 

வரவேற்புக்குழு தலைவர் ஆர்.வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். ஓய்வு பெற்ற பொறியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலளர் எம்.ஊர்க்காவலன் துவக்கி வைத்துப் பேசினார். வேலை அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் சி.குருசாமி, வரவு -செலவு அறிக்கையை மாநில பொருளாளர் ஆ.சாலமன் ஆகியோர் சமர்ப்பித்தனர்.

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், தமிழக வருவாய் - பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பட்டயப் பொறியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.மதனமுசாபர், ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளர்கள் நலச் சங்கத்தின் என்.குமரகுரு, நெடுஞ்சாலை ஆராய்ச்சி அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.சக்திவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை யில் மறு சீரமைப்பு என்ற பெயரில் பொறியாளர் பணியிடங்கள் மட்டுமே அதிகரிக்கப்படுகிறது. பிற பணியிடங்கள் குறைக்கப்படுகிறது. எனவே, கணக்கர் முதல் அலுவலக காவலர் வரையிலான 60க்கும் மேற்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். திறன்மிகு உதவியாளர்கள் பணியிடத்தை நிரந்த வரிசையில் சேர்த்து நிரந்தர ஊதிய தலைப்பின் கீழ் ஊதியம் வழங்க வேண்டும். கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டங்களில் உள்ள காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற அதிகாரிகளை பணியிடங்களில் நிரப்பக் கூடாது.

பிற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயணப்படி போல திறன்மிகு உதவியாளர்களுக்கும் வழங்க வேண்டும். தற்போது 70ஆயிரம் கி.மீ சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. அதற்கு ஏற்றாற்போல திறன்மிகு உதவியாளர்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.