districts

img

பேருந்து வசதி செய்து தரக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் வகையில் அரசுப் பேருந்து வசதியை செய்து தர வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கிராமப்புற மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மூளிப்பட்டி, நாட்டார்மங்கலம், தவசிலிங்கபுரம் மற்றும் மருதநத்தம். இப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்  6 கி.மீ தொலைவில் உள்ள ஆமத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லக்கூடிய காலை மற்றும் மாலை வேளைகளில் பேருந்து வசதி இல்லை. இதன் காரணமாக இப்பகுதியைச் சேர்நத் மாணவ, மாணவிகள் அனைவரும் நாள்தோறும் நடந்தே செல்லும் அவல நிலை உள்ளது.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், திங்கள்கிழமை பேருந்து வசதி செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, பேருந்து வசதி இல்லாத காரணத்தால், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் எவ்வித பாதுகாப்பும் இன்றி  நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதேபோல், தினசரி கூலி வேலைக்கு செல்வோர் மற்றும் நோயாளிகள் கூடுதல் பணம் செலவு செய்து ஆட்டோவில் பயணம் செய்யும் நிலை உள்ளது என வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு அதிகாரிகளைச் சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.