districts

img

இலவச பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்

கரூர், டிச.27 - ஆதிதிராவிடர் நலம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனை வழங்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் காலியாக உள்ளவற்றில் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். தகுதி உள்ள அனைவருக்கும் இலவச வீட்டு மனை வழங்க ஏதுவாக போதுமான நிலத்தை கையகப்படுத்த வேண்டும். வீட்டு மனை பெற்றவர்களை குடியமர்த்த அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தின்(சிஐடியு) கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.சரவணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், மாவட்ட துணை தலைவர்கள் எம்.தண்டபாணி, எம்.சுப்பிரமணி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.சக்திவேல் ஆகியோர் உரையாற்றினர்.  போராட்டத்தை தொடர்ந்து துணை வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், “தகுதியுள்ள அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்கப்படும். இலவச வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படும்” என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.