கரூர், ஜன.24 - கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி பொதுமக்கள் அரசு நிலத்தில் அங்கன்வாடி மையம், பொது கழிப்பிட கட்டடம் கட்டி கொடுக்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அரசு புறம்போக்கு நிலத்தை அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நிலத்தை கொடுக்காததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம், இந்த இடம் அரசு புறம்போக்கு இடம் என்று தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் அரசு புறம்போக்கு நிலத்தில் கம்பி வேலி அமைத்து, 2024-2025 ஆம் ஆண்டில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் மூலம் பொது கழிப்பறை கட்டுவதற்கு ரூ.9.96 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்று வரை கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு பொது கழிப்பறை கட்டுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அரசு நிலத்தில் அமைக்கப்பட கம்பி வேலியை தனிநபர் அகற்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பொதுமக்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் அங்கன்வாடி மையம், பொது கழிப்பிட கட்டடம் கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியக் குழு சார்பில் ஒன்றியச் செயலாளர் எ.நாகராஜன் தலைமையில், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் பிரபாகரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், அரசு புறம்போக்கு நிலத்தில் உடனடியாக பொதுமக்களுக்கு பொது கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணி, மாயனூர் காவல் ஆய்வாளர் முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வி.நாகராஜன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.