districts

img

வன்னியன்விடுதி, மங்கதேவன்பட்டி ஜல்லிக்கட்டு: ஒருவர் பலி, காளை உயிரிழந்தது, 29 பேர் காயம்

புதுக்கோட்டை, ஜன.18-  புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதி, மங்கதேவன்பட்டி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் 1,357 காளைகள் பங்கேற்றன. இதில், 29 பேர் காயமடைந்தனர். பார்வையாளர் ஒருவர் மாடுமுட்டி பலியானார். காளை ஒன்று, கிணற்றில் விழுந்து உயிரிழந்தது.  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, வன்னியன் விடுதியில்  வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை, மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் 300 பேர் களம் கண்டனர். தொடர்ந்து, காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், மின் விசிறி, சைக்கிள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.  காளை முட்டியதில் 19 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு முகாமிட்டு இருந்த மருத்துவக் குழுவினரார் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும், 3 பேர் மேல்க சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  மங்கதேவன்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 607 காளைகள் பங்கேற்றன. போட்டியை திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே. செல்லப்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடு பிடி வீர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.  காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக 3 பேர் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.  இரண்டு ஊர்களில் நடைபெற்ற ஜல்லிகட்டுப் போட்டிகளில், 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வெளி மாவட்டங்களில் இருந்தும், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.   மாடு முட்டி ஒருவர் பலி மங்கதேவன்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில், கீரனூர் அருகே உள்ள ஒடுகம்பட்டி விளாவயல் சின்னப்பயல் மகன் பெருமாள்(70) என்பவர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தபோது, அவர் மீது காளை முட்டியதில் பலத்த காயமடைந்து ஜல்லிக்கட்டு திடலில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பெருமாள் உயிரிழந்தார்.  கிணற்றில் விழுந்து காளை உயிரிழந்தது  இதேபோ், வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு திடலில் இருந்து வெளியேறிய மயிலாடிக்காடு சண்முகம் என்பவரது காளை, பரவாக்கோட்டை பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்தது. இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.