திருச்சிராப்பள்ளி, ஜன.7 - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 5 நகராட்சி, 14 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் 1262 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில் இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவராசு தலை மையில் நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் கணினி மூலம் முதலாவது குலுக்கல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சி வாரியாக மொத்தம் 1262 வாக்குச்சாவடிகளுக்கும் (20 சதவீதம் இருப்பு உள்பட) மொத்தம் 1519 கட்டுப்பாட்டு எந்திரங்களும் 1519 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.