தஞ்சாவூர், ஜன.9- மாநில உரிமையைப் பறிக்கும் வகையில், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை ஆளுநரே அமைப்பார் என்ற யுஜிசி அறிக்கையை ரத்து செய்யக் கோரி, தஞ்சாவூர் சரபோஜி அரசுக் கல்லூரியில், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜுன் தலைமையில், செவ்வாய்க்கிழமை மாணவர்கள் சிறிது நேரம் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் கோ. அரவிந்தசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கிளைச் செயலாளர் பிரேம்குமார், கிளைத் தலைவர் ரஞ்சித், கிளை நிர்வாகிகள் ஜெனிஃபர், சுமித்ரா, ஷாலினி, சரோஜினி, வசந்த், வீரராஜா, திலீப், அஸ்வின் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் கலந்து கொண்டு, யுஜிசி அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். புதுக்கோட்டை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்ற வகையில் யுஜிசியின் புதிய வழிகாட்டுதலைக் கண்டித்து, புதுக்கோட்டையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் கல்லூரி கிளைத் தலைவர் தாரணி பிரியா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.வசந்தகுமார், செயற்குழு உறுப்பினர்கள் பாலாஜி, மகாலெட்சுமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திரு.வி.க. அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் இந்திய மாணவர் சங்கத்தின் கிளை தலைவர் செ. செல்வ பிரகாஷ் தலைமையில் 300 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் யுஜிசி அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இந்தப் போராட்டத்தில் மாணவர் சங்கத்தின் மாவட்டத் துணை தலைவர்கள் வீ.சந்தோஷ், பா.விக்கி, கிளை உறுப்பினர் சத்தியமூர்த்தி, ராகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குடவாசல் குடவாசல் அரசு கலைக் கல்லூரி முன்பாக யுஜிசி நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்க்கு கிளை தலைவர் ரா. சிவனேஷ் தலைமை வகித்தார். மாவட்டத் துணை செயலாளர் கா. கலைசெல்வன், ரா.ரஞ்சித்குமார் மாவட்ட செற்குழு ஊறுப்பினர் ரா. ரஞ்சித்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரி, மணல்மேடு அரசுக் கல்லூரிகளில் இந்திய மாணவர் சங்கத்தினர் வியாழனன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிக்கும் யுஜிசியின் அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தியும், யுஜிசி வெளியிட்ட புதிய வழிகாட்டுதல் அறிக்கையின் நகலை கிழித்தெறிந்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் அன்புமணி, அபிலாஷ், பகத்சிங், ராகுல், சுருதி, அவினாஷ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.