districts

இந்தி மொழியை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசு: பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கண்டனம்

பாபநாசம், ஏப்.9 - மொழி வழியாக இந்திய மக்களை பிளவுபடுத்தும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வுமான  ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற அலுவல் மொழி மாநாட்டில் இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் காரணங்களுக்காக மக்களை பிளவுபடுத்தி வாக்கு வங்கியை தக்க வைக்கும் நோக்கத்தோடு பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் நிலவி வரும் ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கும் வேட்டு வைக்கும் முயற்சியை தொடர்ந்து அது முன்னெடுக்கிறது. இந்திய மக்களை மொழி அடிப்படையில் பிளவுபடுத்தும் நோக்கில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருப்பது உகந்ததல்ல.  இந்திய அரசமைப்புச் சட்டம் 343(3) இன் படி ஆட்சி மொழிகள் சட்டம் நிறைவேறிய போது அன்றைய பிரதமர் நேரு, ‘ஒரு மொழி மற்றொரு மொழியைவிட தேசியம் ஆனது என்ற பேச்சுக்கு இடமில்லை’ என தெளிவுபடுத்தியுள்ளார்.  உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உரை இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் ஆட்சி மொழிகள் சட்டத்திற்கும் விரோதமானதாகும். ஒருநாடு, ஒரு மதம், ஒரு மொழி என்ற சங்பரிவாரக் கொள்கையை, ஒன்றிய ஆட்சியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகத் திணிக்கும் முயற்சியின் வெளிப்பாடகவே உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு அமைந்துள்ளது. இந்தியாவின் பன்முகத் தன்மையையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் வகையில் அமித்ஷா பேசியிருக்கிறார்.  மீண்டும் இந்தி மொழித் திணிப்பு முயற்சி நடக்கும் எனில், தமிழகத்திலுள்ள முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாகும். மொழி உணர்வை தூண்டி மக்களை பிளவுபடுத்தும் அமித்ஷா பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.