சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தஞ்சாவூர், ஜன.6 - தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி தனது 16 வயது மகளை 2021-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து தொழி லாளியை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சுந்தர்ரா ஜன், தொழிலாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கு மாறு அரசுக்கு பரிந்துரை செய்தார்.
ஆற்றில் விடப்பட்ட நாட்டு இன மீன்கள்
கும்பகோணம், ஜன.6- தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் மீன் குஞ்சுகளான கட்லா, ரோக்கு, மிர்கால், சேல் கெண்டை கல்பாசு போன்ற அழிவின் நிலையில் உள்ள மீன்களை மீட்ப தற்காக மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தின்கீழ், 40 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. நிகழ்ச்சிக்கு அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராம லிங்கம் மீனவர்களுக்கு அடையாள அட்டை, மீன் உரம் வழங்கினார். நாகப் பட்டினம் மீன் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி இயக்குநர் சிவக்குமார், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் கோ.க.அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மீட்பு
பேராவூரணி, ஜன.6- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் ஆதரவற்ற நிலையில் யாசகம் பெற்று வாழ்ந்த 25 பேரும், மனநலம் பாதிக்கப்பட்ட 5 பேரும் மீட்கப் பட்டு இலவச முகாம் மற்றும் மனநல மருத்துவமனையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். ஆதரவற்றோருக்காக ‘ஆபரேஷன் புதுவாழ்வு’ எனும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி சாலையோரங்கள் மற்றும் கோவில்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்க ளில் யாசகம் பெற்று வாழும் ஆதரவற்றவர்களை மீட்டு அரசு பதிவுபெற்ற கருணை இல்லங்களில் சேர்க்கலாம் என அறிவித்துள்ளது. இதன்படி, பேராவூரணியின் பல்வேறு இடங்களில் ஆதரவற்ற நிலை யில் கடும் குளிரில் வாடிய 25 பேர் இலவச முகாமிலும், மன நலம் பாதிக் கப்பட்டு பராமரிப்பின்றி இருந்த 5 பேர் தஞ்சையில் உள்ள மனநல மருத்து வமனையிலும் சேர்க்கப்பட்டனர். மஹாசக்தி பெண்கள் தொண்டு நிறுவன தலைவர் ஜெயலட்சுமி தன்னார்வலர்களுடன் இணைந்து, கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக இரவு பகலாக ஆதரவற்றவர்களை தேடி கண்டுபிடித்து காப்ப கத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஜன.11 தஞ்சையில் உள்ளூர் விடுமுறை
தஞ்சாவூர், ஜன.6- தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா, ஜனவரி 6 முதல் 11 ஆம் தேதி வரை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜனவரி 11 (புதனன்று) ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக ஜனவரி 21-ஆம் தேதி (சனிக்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவ லகங்களுக்கும், பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிய சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத் தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணிகளுடன் இயங்கும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்ட விளக்கப் பிரச்சாரம்
மயிலாடுதுறை, ஜன.6- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் சார்பில் ஐவேலி, வேலம்புதுக்குடி, பனங்குடி, கொத்தங்குடி, நல்லாடை பகுதிகளில் தேசிய மின்னணு வேளாண் திட்டம் மற்றும் பயன்களை விளக்கி திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பி.எம்.பாபு தலைமை வகித்தார். தலைமை அலுவலக பொறுப்பாளர் சிலம்பரசன், நாகை விற்பனை கூட மேற்பார்வையாளர் விக்னேஷ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சங்கர் ராஜா பயன்கள் குறித்து பேசினார். விற்பனைக் குழு அலுவலர்கள் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். நிகழ்வில், விவசாயிகள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே விளை பொருட்களை தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் ‘‘பார்ம் டிரேடிங்’’ முறையில் விற்பனை செய்வது குறித்து விளக்கப்பட்டது.
போதை ஒழிப்பு விழிப்புணர்வு
அரியலூர், ஜன.6- அரியலூரை அடுத்த விளாங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் மது அருந்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.கலைவாணி தலைமை வகித்தார். கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், கலால் துணை ஆணையர் ஷோபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சாளர் பர்வின் சுல்தானா பங்கேற்று பேசினார். கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சாலைப் பணி ஆய்வு
அரியலூர், ஜன.6- அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தின் மூலம், முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரியலூர் - செந்துறை இரு வழிச்சாலை, நான்கு வழிச்சாலையாக அறிவிக்கப்பட்டு ரூ.129 கோடி மதிப்பீட்டில் சாலை பணி நடைபெற்று வருகிறது. பணியினை சென்னை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கோதண்டராமன் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பசுமை வழித்தடமாக அமையவுள்ள இந்த சாலையின் ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகாஷ், கோட்ட பொறியாளர் உத்தண்டி, உதவிக்கோட்ட பொறி யாளர்கள் கலந்து கொண்டனர்.
கூடுதல் பேருந்துகள் கோரி மறியல்
பாபநாசம், ஜன.6- தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே கும்பகோணம் - திருவை யாறு மெயின் சாலையில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. மறியலுக்கு சங்கத்தின் கும்பகோணம் மாநகரச் செயலாளர் ராகுல் தலைமை வகித் தார். பாபநாசம் ஒன்றியப் பொறுப்பாளர்கள் நவீன், நிசாந்த் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற மாணவர்கள் கூறுகையில், கும்பகோணம் - திருவை யாறு மெயின் சாலையில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. ஆனால், 8 பேருந்துகள் சென்று வந்த நிலையில் தற்போது 3 பேருந்துகள் மட்டுமே செல்கின்றன. நேரத்திற்கு பேருந்து இல்லாததால் கல்லூரிக்கு தாமதமாக செல்ல வேண்டியுள்ளது என்றனர். காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறையூர் சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை சரியானது! அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி
புதுக்கோட்டை, ஜன.6- இறையூர் கிராமத்தில் தீண்டாமையை கடைப்பிடித்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை சரியானது என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், ‘‘புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் வழி காட்டு நெறிமுறைகள் முறையாக கடை பிடிக்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் நிறுத்தி வைத்திருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு உச்ச நிதிமன்றத்தில் இப்போ தும் நிலுவையில் உள்ளது. இறுதித்தீர்ப்பு இன்னும் வரவில்லை. வேங்கைவயல் பட்டியலின மக்களின் குடியிருப்புக்கு தண்ணீர் வழங்கும் தொட்டி யில் மனிதக் கழிவைக் கலந்த விவகாரத்தில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து மக்கள் எழுப்பிய புகார்கள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். சட்டப்படி யாரையும் இழிவாக நடத்தக் கூடாது. இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை சரியானது’’ என்றார்.