தாட்கோ மூலம் விமான நிலைய பணிகளுக்கான பயிற்சி
தஞ்சாவூர், ஜன.16- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய, சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (ஐ.ஏ.டி.ஏ. கனடா) நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. அதன் அடிப்படையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களுக்கு, சர்வதேச விமான போக்குவரத்தால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அடிப்படை படிப்புகள் மற்றும் விமானப் பயண முன்பதிவு போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி, வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 18 முதல் 23 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 6 மாதம் ஆகும். விடுதியில் தங்கிப் படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீனத் தொகையான ரூ.95 ஆயிரம் தாட்கோவால் மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஐ.ஏ.டி.ஏ. இண்டர்நேஷனல் ஏர் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன்-கனடா முலம் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். மேலும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும், சொகுசு கப்பல் மற்றும் சுற்றுலா துறையிலும் வேலைவாய்ப்பு பெறலாம். ஆரம்ப கால மாதாந்திர ஊதியமாக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். பின்னர். திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ரூ.50 ஆயிரம் - முதல் 70 ஆயிரம் வரை ஊதிய உயர்வு பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இளம் நெறிஞர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, ஜன.16- புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அலகிற்காக இளம் நெறிஞர் பணியிடத்திற்கு, தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு மற்றும் தரமான தரவுகளை ஆய்வு செய்தல் ஆய்வுகளின் அடிப்படையில் விளக்க காட்சிகள், கொள்கை விளக்கங்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் விதமாக இளம் நெறிஞர் பணி நியமனம் செய்யப்படவுள்ளது. கணினி அறிவியல் தகவல் தொழிநுட்பத்தில் இளங்கலை பொறியியல் மற்றும் தரவு அறிவியல் மற்றும் புள்ளி இயல் படிப்பில் இளங்கலை பட்டம் அல்லது தொடர்புடைய படிப்பில் முதுகலை பட்டம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசின் பணியாளர் தேர்வு விதிமுறைகள் அடிப்படையில் இளம் நெறிஞர் நியமனம் நடைபெறும். மேற்படி தகுதியுள்ள இளம் நெறிஞருக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 27.01.2025 தேதிக்குள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தினை புள்ளி இயல் துணை இயக்குநர், மாவட்ட புள்ளி இயல் அலுவலகம், போஸ் நகர், புதுக்கோட்டை-622001 என்ற முகவரிக்கு நேரிலோ தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
தஞ்சாவூர், ஜன.16 - தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமையன்று, திருவள்ளுவர் தினத்தையொட்டி, பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொ) பேராசிரியர் க.சங்கர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தார். இந்நிகழ்வில் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ)தெ. வெற்றிச்செல்வன், மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சு.முருகன், பொறியியல் பிரிவு தனுஷ்கோடி, நேர்முக உதவியாளர் க.செந்தில்குமார், ஆட்சிக்குழுப்பிரிவு உதவியாளர் செ.சித்ரா, தலைமைக்காவலர், காவலர்கள், கேள்வி காட்சி மைய அலுவலர்கள், மக்கள் தொடர்பு பிரிவு அலுவலர்கள், பொறியியல் பிரிவு அலுவலர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.