போராட்டத்தைத் தொடர்ந்து குடிநீர்த் தொட்டியை சரிசெய்ய வந்த ஊழியர்களை மிரட்டி திருப்பி அனுப்பிய ஆளுங்கட்சியினர்
மாநகராட்சி அலுவலகத்தை முற்றுயிடுவோம்: சிபிஎம் எச்சரிக்கை
புதுக்கோட்டை, ஜன.23- போராட்டத்தைத் தொடர்ந்து குடிநீர்த் தொட்டியை சரிசெய்ய வந்த புதுக்கோட்டை மாநகராட்சி ஊழியர்களை, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே மிரட்டி திருப்பி அனுப்பிய சம்பவத்தைக் கண்டித்து, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கட்சியின் புதுக்கோட்டை மாநகரச் செயலாளர் எஸ். பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட உசிலங்குளம் பகுதியில் கடந்த 6 மாதங்களாக, குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படாததால் மக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வந்தனர். சம்மந்தப்பட்ட மாமன்ற உறுப்பினரிடமும், அதிகாரிகளிடமும் பல முறை முறையிட்டும் பிரச்சனை தீரவில்லை. குடம் ஒன்றுக்கு 10 ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய அவல நிலையில் அப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். நூதனப் போராட்டம் இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உசிலங்குளம் கிளையின் சார்பில், குடிநீர் பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க வேண்டும். பாதாளச் சாக்கடை கழிவுநீர், குடிநீரில் கலப்பதைத் தடுக்க வேண்டும். தெரு நாய்களையும், சுற்றித்திரியும் மாடுகளையும் கட்டுப்படுத்த வேண்டும். புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலை அகலப் படுத்தும் பணியை வேகப்படுத்த வேண்டும். உசிலங்குளத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். அய்யனார் திடலில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உடனடியாக பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமும், பழுதடைந்து இயங்காமல் இருந்த சிறு மின் விசைத் தொட்டிகளுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தியும் புதன்கிழமை நூதனப் போராட்டம் நடைபெற்றது. மேற்கண்ட போராட்டம் பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பழுதடைந்துள்ள சிறு மின்விசைத் தொட்டிகளை சரிசெய்வதற்காக புதுக்கோட்டை மாநகராட்சி ஊழியர்கள் உசிலங்குளம் பகுதிக்கு வியாழக்கிழமை வந்துள்ளனர். ஓட்டுப்போட்ட மக்களுக்கு துரோகம் அப்போது, அங்கு இருந்த ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் “கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்திய பிறகு, குடிநீர்த் தொட்டியை சரிசெய்ய வந்தால் எங்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது. நாங்கள் எப்படி அரசியல் செய்வது” என்று கூறி, பழுதுபார்க்க வந்த ஊழியர்களை மிரட்டி திருப்பி அனுப்பியுள்ளனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்தான் அப்பகுதி மாமன்ற உறுப்பினராக உள்ளார். ஓட்டுப்போட்டு வெற்றிபெறச் செய்த மக்களுக்கே துரோகம் செய்யும் நடவடிக்கையில் திமுகவினர் ஈடுபடுவது வேடிக்கையாக உள்ளது. புதுக்கோட்டை மாநகராட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகமும் ஆளுங்கட்சிக்கு கட்டுப்பட்டது என்பதைப் போல நினைத்துக்கொண்டு செயல்படும் திமுகவினரின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆளுங்கட்சியினரின் அடாவடித் தனத்திற்கு இரையாகாமல் மாநகராட்சி நிர்வாகம் உசிலங்குளம் பகுதியில் சீரான குடிநீர் விநியோகத்திற்கு உடனயடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதி மக்களின் இதர கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கட்சியின் சார்பில் விரைவில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உயர்கல்வி பயில்வோருக்கு கல்விக்கடன் வழங்கும் முகாம்
தஞ்சாவூர், ஜன.23- தஞ்சாவூரில், உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கான கல்விக்கடன் வழங்கும் முகாம், மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து, பழைய பேருந்து நிலையம் அறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது. தற்போது, கல்விக் கடன் பெற விரும்பும், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் கல்விக்கடன் வழங்கும் முகாமில் கல்விக்கடன் கோரும் மாணவ, மாணவிகள் நேரில் வந்து கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். மாணவர்கள், தங்களது மற்றும் பெற்றோர், பாதுகாவலரின் ஆதார் அட்டை நகல், 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல், குடும்ப அட்டை நகல், பான்கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2, ஆண்டு வருமானம் சான்றிதழ் நகல், சாதிச்சான்றிதழ் நகல் மற்றும் முதல் பட்டதாரி சான்று நகல், கல்லூரியில் கல்வி பயில்வதற்கான சான்று, கல்விக் கட்டண விபரச்சான்று, மாணவ மாணவியர்களின் மற்றும் பெற்றோர், பாதுகாவலரின் வங்கிக்கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ராபிட்டோ, பைக் டாக்சியை தடை செய்ய வேண்டுகோள்
திருச்சிராப்பள்ளி, ஜன,23- சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்க ஜங்ஷன் பகுதிக்குழு ஆண்டு பேரவை கூட்டம் புதனன்று திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு பகுதி தலைவர் அழகுமலை தலைமை வகித்தார். பகுதி செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சிலம்புசெல்வன் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். கூட்டத்தில் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் மணிகண்டன், அமைப்புச் செயலாளர் வெற்றிவேல், மாவட்டப் பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் பேசினர். ராபிட்டோ, பைக் டாக்சியை உடனே தடை செய்ய வேண்டும். போக்குவரத்து ஆணையர் அனுப்பிய உத்தரவை அமல்படுத்த வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை திருத்தி அமைத்து இயக்கும் நிறுவனங்கள் மீதும், மீட்டர் ஆட்டோக்கள் மீதும் சட்டப்படி நடக்க எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. புதிய பகுதி தலைவராக அழகுமலை, பகுதி செயலாளராக வேல்முருகன், பகுதி பொருளாளராக சிலம்புசெல்வன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற சிபிஎம் தோழர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடி
திருவாரூர், ஜன.23- சிபிஎம் சார்பாக மக்களுக்கான கோரிக்கை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்ட வழக்கில் தோழர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 11.10.2019 இல் வீட்டு மனை பட்டா வழங்கல், உழவர் பாதுகாப்புத் திட்டம், 100 நாள் வேலையை 200 நாள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்திய போதிலும் தோழர்கள் சிபிஐஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன், வி.தொ.ச. ஒன்றிய பொருளாளர் ஏ.சங்கர், சிபிஐஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாகு ராஜினிகாந்த், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.ராமமூர்த்தி, வரத.வசந்தராஜன் ஆகியோர் மீது, நன்னிலம் காவல்துறை போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொதுமக்களுக்கு இடையூறாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், காவல்துறையைக் கண்டதும் களைந்து விட்டதாகவும் பொய் வழக்கு பதிந்திருந்தது. அந்த வழக்கு விசாரணை நன்னிலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தோழர்களிடமும், சாட்சிகள், விசாரணை அதிகாரியிடம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு புதன்கிழமை அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு தோழர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
வேங்கைவயல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி சிபிசிஐடி போலீசார் மனு
புதுக்கோட்டை, ஜன.23:- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி சிபிசிஐடி போலீசார் மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியிலின மக்களின் குடியிருப்பில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி தெரியவந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரி சிபி சிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜகபர்அலி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்கக் கூடாது:
கனிமவள பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோரிக்கை
புதுக்கோட்டை, ஜன.23- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கனிவளக் கொள்ளையை எதிர்த்துப் போராடி வந்த ஜகபர்அலி கொல்லப்பட்ட வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என கனிமவளப் பாதுகாப்பு தொடர்பான செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அந்த அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் கனிமக் கொள்ளைக்கு துணையாகச் செயல்பட்டு வருவதால் ஜகபர் அலி கொலை வழக்கை வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். சிபிசிஐடி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது மக்களிடையே பேசுபொருளாகியுள்ள கனிமவளக் கொள்ளை குறித்த கவனத்தை திசைதிருப்பும் செயலாக உள்ளது. வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம், கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி கொல்லப்பட்ட வழக்கு, கள்ளக்குறிச்சி சாராயச் சாவுகள் வழக்கு போன்றவற்றில் சிபி சிஐடி போலீசாரின் விசாரணை முறையாக இல்லை. மாநிலம் முழுவதும் சட்டவிரோத கனிமவளக் கொள்ளையில் ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகளின் முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தொடர்பு உள்ளது. எனவே சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையின் மூலமே நீதி கிடைக்கும். ஜகபர்அலி கொலையில் தொடர்புள்ள அனைவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜகபர்அலி கொடுத்த இரு புகார் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்துத் துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். மாநிலம் முழுவதும் இயங்கும் அனைத்து கல் குவாரிகளையும் போர்க்கால அடிப்படையில் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பாரம்பரிய நெல் வர்த்தகம்
பாபநாசம், ஜன.24- வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும் தஞ்சாவூர் விற்பனைக் குழுவிற்கு உட்பட்ட, பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், கிராம அளவில் வர்த்தகத்தை ஊக்குவிக்க, வர்த்தக ஒருங்கிணைப்பாளர்களை ஈடுபடுத்தும் முன்மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) சுதா, தஞ்சாவூர் விற்பனைக்குழுச் செயலாளர் சரசு ஆகியோர் தலைமையிலும், விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி முன்னிலையிலும் மறைமுக ஏலம் செவ்வாயன்று நடைபெற்றது. மறைமுக ஏலத்தில், பாபநாசம் வட்டாரத்தைச் சேர்ந்த 4 விவசாயிகள் தங்களது கருப்புக் கவுனி மற்றும் மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்தினை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். மறைமுக ஏலத்தில் 5.600 மெட்ரிக் டன் அளவுள்ள கருப்பு கவுனி ரகமானது, அதிகபட்சம் கிலோ ஒன்றிற்கு ரூ.70 என்ற விலை வீதத்தில் விற்பனையானது. மறைமுக ஏலத்தில் 7 வணிகர்கள் கலந்து கொண்டனர். மொத்த பரிவர்த்தனை மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம். விவசாயிகளின் விளை பொருள்களுக்குரிய கிரயத் தொகை மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவானது. இம்முன் மாதிரித் திட்டத்தின் கீழ், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விவசாயிகளின் விளை பொருட்களை அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஏதுவாக, 3 வர்த்தக ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, விவசாயிகளின் விளைபொருட்கள் தொடர்ந்து, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் விற்பனை செய்து பயனடைவது குறித்து விழிப்புணர்வுனை ஏற்படுத்தி, வரத்தினை அதிகரித்திட, தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருட்களை மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம், அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து பயனடையுமாறு தஞ்சாவூர் விற்பனை குழு
பாபநாசம் கூட்டுறவு நகர வங்கியின் 109 ஆவது பேரவைக் கூட்டம்
பாபநாசம், ஜன.23- பாபநாசம் கூட்டுறவு நகர வங்கியின் 109 ஆவது பேரவைக் கூட்டம் நடந்தது. வங்கி உறுப்பினரும், ஓய்வு தேசிய நல்லாசிரியருமான கலைச் செல்வன் தலைமை வகித்தார். ஓய்வு மாவட்ட கருவூல அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். முன்னதாக கிளை மேலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். பாபநாசம் கூட்டுறவு நகர வங்கி கூட்டுறவு செயல் ஆட்சியர் சரவணன், நிர்வாக அறிக்கை வாசித்தார். வங்கி பொதுமேலாளர் தியாகராஜன் வரவு- செலவு அறிக்கை, 2024-25 ஆம் ஆண்டிற்கான திட்ட அறிக்கையை வாசித்தார். இதில் ஓய்வு மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம், ஓய்வு வங்கி பொதுமேலாளர் கரிகாலன், ஓய்வு நல்லாசிரியர் ஜோசப், ஓய்வு கருவூல அலுவலர் கலைமணி, வங்கி உறுப்பினர்கள் திருமேனி, ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் உதவியாளர்கள் பிரவீன் குமார், உஷாராணி, ஹரி பிரசாத், உஷா, சங்கீதா, பார்கவி, அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் உட்பட வங்கி வாடிக்கையாளர்கள் கலந்துக் கொண்டனர். வங்கி மேலாளர் ஆனந்தி நன்றி கூறினார்.
திருவாரூர் புத்தகக் கண்காட்சியில் ஆட்சியர் ஆய்வு
திருவாரூர், ஜன.23- திருவாரூர் மாவட்ட புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்.எஸ். நகரில் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 3 ஆவது புத்தக கண்காட்சியை முன்னிட்டு “திருவாரூர் வாசிக்கிறது” என்ற தலைப்பில் அனைத்து நூலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற “திருவாரூர் வாசிக்கிறது” நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டார். இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள், தமிழ் கவிஞர்களின் புத்தகங்களை வாசிப்பதனை ஊக்குவிக்கும் வகையிலும், திருவாரூர் மாவட்ட புதிய பேருந்துநிலையம் அருகேயுள்ள எஸ்.எஸ்.நகரில் எதிர்வரும் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 3 ஆவது புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு “திருவாரூர் வாசிக்கிறது” என்ற தலைப்பில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நூலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருட்டு, கத்திக்குத்து முயற்சி: மூவருக்கு ரூ.90 ஆயிரம் அபராதம்
திருவாரூர், ஜன.23- குடவாசல் காவல் சரகம், மழவச்சேரி ஆதி திராவிட தெருவைச் சார்ந்த வீரையன் என்பவரது மகன் கருணாநந்தம் என்பவர், தொகுப்பு வீடு கட்டும் போது கட்டிட வேலைக்காக வைத்திருந்த இரும்பு கம்பிகளை, அதே ஊரைச் சார்ந்த கோபால் மகன் ராகுல்(21) என்பவர் திருடிவிட்டதாகவும், அதுபற்றி கருணாநந்தம் என்பவர் கேட்டபோது ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியில் ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் கீழநாணச்சேரி பாலு மகன் பாலா, குடவாசல் சேங்கிலிபுரம் சாலை செல்வம் மகன் அஜித்குமார் ஆகியோர் கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளனர். அதனால் கருணாநந்தம் குடவாசல் காவல் நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி கொடுத்த புகார் மனுவின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் குற்ற அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் விசாரணை மேற்கொண்ட குடவாசல் நீதித்துறை நடுவர், விசாரணை முடிக்கப்பட்டு 22.01.2025 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதில், எதிரிகள் ராகுல், பாலா, அஜித்குமார் ஆகிய முவருக்கும் தலா ரூ.30,000 வீதம் முவருக்கும் ரூ.90,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேற்கண்ட அபராதத் தொகையை ஐனவரி 28-ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டும் என்றும், அவ்வாறு செலுத்த தவறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் குடவாசல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதி அரசர் பாரதிதாசன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.