districts

img

திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் தடையை மீறி உண்ணாவிரதம் நெசவாளர்கள் கைது

கும்பகோணம், பிப்.25-   தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தினர்களுடைய நெசவுக்கூலியை வங்கியில் செலுத்தாமல் வழக்கம்போல் ரொக்கமாக வழங்கிடவும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நெசவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில் திருவிடைமருதூர் காவல்துறையினர் உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுத்தனர். இருப்பினும், திருபுவனம் பட்டு அங்கத்தினர்கள், கடந்த 70 ஆண்டுகளாக சங்கம் துவங்கப்பட்ட நாள் முதல் நெசவுக்கூலியை ரொக்கமாக சங்கத்திலிருந்து பெற்று வருகின்றனர். தற்போது சங்க நிர்வாகம் 2025 பிப்ரவரி 1 முதல் நெசவு கூலியை ரொக்கமாக வழங்காமல் அங்கத்தினர்கள் ஒப்புதல் இன்றி வங்கியில் செலுத்துவது, கூட்டுறவு சங்க சட்டவிதி மீறலாகும். இம்முறையினால், வங்கிக்குச் சென்று பணம் பெற வேண்டி இருப்பதால் கால விரையமும் வேலை இழப்பும் ஏற்படுகிறது. எனவே, அங்கத்தினர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காமல் கூலியை சங்கத்திலேயே ரொக்கமாக வழங்கிட வேண்டும்.  அங்கத்தினர்களின் வேலைவாய்ப்பை குறைக்கும் புதிய பாவு வழங்கும் காலக்கெடுவை கைவிட்டு, தட்டுப்பாடு இன்றி வேலை வழங்க வேண்டும். புடவை வரவு வைக்கும் நாட்களை குறைத்து பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும். இறந்த உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு காலதாமதம் செய்யாமல் பங்கு மாற்றம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது காவல்துறையினர், நெசவாளர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து, நெசவாளர்களை கைது செய்தனர்.  இதனைத் தொடர்ந்து, நெசவாளர்கள் தங்களுக்கான உரிமை கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் தொடரும் என அறிவித்தனர்.  போராட்டத்திற்கு நெசவாளர்கள் சங்கத்தின் தலைவர் பக்கிரிசாமி தலைமை வகித்தார். நெசவாளர்கள் கூட்டுக் குழு கௌரவத் தலைவர் ஜீவபாரதி, சிஐடியு மாநிலச் செயலாளர் நாகேந்திரன், நெசவாளர்கள் சங்க பொறுப்பாளர்கள், சிஐடியு சேகர், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.