districts

img

ஆசிரியர்களை பழிவாங்கும் தனியார் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

புதுக்கோட்டை, ஜன.10 - ஆசிரியர்களைப் பழிவாங்கும் தனியார் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ‘ஷிவானி வித்யா மந்திர்’ என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இருந்து பல்வேறு காரணங்களால் வெளியேறும் ஆசிரியர்களின் அசல் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் தலையீட்டையும் மதிக்காமல் அராஜகமாக பள்ளி நிர்வாகம் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, பள்ளி நிர்வாகத்தின் இத்தகைய அராஜக நடவடிக்கையைக் கண்டித்தும், மேற்படி  பள்ளியில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வலியுறுத்தியும், பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்படும் அறந்தாங்கி காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். போராட்டத்தைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் லீலாவதி சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், ஜன.20 ஆம் தேதிக்குள் ஆசிரியர்களிடம் உரிய சான்றிதழ்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.