districts

img

‘தரங்கம்பாடியில் 260 ஆண்டுகளுக்கு முன்பே வந்த மொரோவியன் ஸ்டார்’

டேனிஷ்காரர்கள் (டென்மார்க்) கட்டுப்பாட்டில் இருந்தபோது 1760-களில் தரங்கம்பாடியை தலைமையிடமாக கொண்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கிறிஸ்தவத்தை பரப்பி வந்த ஜெர்மனி நாட்டின் மொரோவியன் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ மறை போதகர்கள் தரங்கம்பாடிக்கும் மேற்கே 1.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சாத்தங்குடி கிராமத்திலுள்ள சாலோமன் தோட்டம் அழைக்கப்படுகிற இடத்தில் தங்கி இருந்து அங்கு திராட்சை, சாத்துக்குடி போன்ற பழவகைகளையும்,காய்கறிகளையும் பயிரிட்டு வந்ததோடு பல்வேறு கைவினைப் பொருட்களை செய்தும் கலைகளை கற்று தேர்ந்தவர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.  அவர்கள் அங்கு தங்கியிருந்த போது தான் மொரோவியன் ஸ்டார்களை இந்தியாவிலேயே முதன்முறையாக தயாரித்து அறிமுகப்படுத்தி தரங்கம்பாடி, பொறையார், தில்லையாடி உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளிலும், தாங்கள் சென்ற ஒவ்வொரு பகுதிகளிலும் பரப்பியுள்ளனர்.  அது முதல் இந்த ஸ்டார்கள் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பாரம்பரிய  ஆலயங்கள், கட்டிடங்களிலும் கிறிஸ்துமஸ் காலங்களில் அழகாக ஒளிர்ந்து வருகிறது. டேனிஷ் ஆட்சிக்காலத்திற்கு பிறகு பிரிட்டிஷ் காலம் அதைத்தொடர்ந்து இந்திய சுதந்திரத்திற்கு பிறகும் தரங்கம்பாடி, பொறையார், காரைக்கால், மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகமாய் வசிக்கும் ஊர்களில் பாரம்பரியமான மொரோவியன் ஸ்டார்கள் தொங்கவிட்டிருந்தாலும் அவை தரங்கம்பாடியிலேயே முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து அங்கு வசித்த ஜெர்மனி நாட்டினராலேயே தயாரிக்கப்பட்டு வந்துள்ளது என வரலாற்று ஆதாரங்களை காண்பித்து ஓய்வுப்பெற்ற பேராசிரியரும், எழுத்தாளருமான மரியலாசர் கூறுகிறார்.  

இந்நிலையில், தரங்கம்பாடி சீகன்பால்கு ஆன்மீக மன்றத்தில் தோட்ட வேலை செய்து வருகிற சமாதானம் பாக்யராஜ் என்கிறவர் கடந்த 1980-களில் ஆன்மீக மன்றத்தில் இயக்குநராக பணியாற்றி ஏராளமான ஏழை,எளிய குழந்தைகளுக்கு கல்வி உதவியளித்த மறைந்த பிஷப் ஜான்சன் துணைவியாரான ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஈவா மரியா சீபெர்ட் ஜான்சன் என்பவர் வைத்திருந்த மொரோவிய ஸ்டாரை பார்த்தும் அவர் சொன்ன செய்முறை பயிற்சியின் மூலம் கற்று தேர்ந்துள்ளார்.  42 ஆண்டுகளாக தொய்வின்றி மொரோவியன் ஸ்டார்களை செய்து குறைந்த விலையில் விரும்பி கேட்பவர்களுக்கு செய்து தருகிறார். அதிக நேரம் செலவிட்டு தயாரித்து வருவதாகவும் உதவிக்கு தனது மனைவி இருப்பதாகவும், அவரும் இந்த ஸ்டார்களை செய்ய கற்றுக்கொண்டுள்ளார் என கூறும் சமாதானம் ஆர்வமுடன் வரும் ஏராளமான இளைஞர்களுக்கு தொடர்ந்து கற்றுத்தருவதாக உற்சாகமாக கூறுகிறார்.  பாரம்பரியமான மொரோவியன் நட்சத்திரங்களை செய்துவரும் சமாதானம் போன்றவர்களை கடன் உதவி வழங்கி ஊக்குவித்தால் தரங்கம்பாடியின் பெருமை பேசும்  மொரோவியன் ஸ்டார்கள் விழாக்காலங்களில் வருமானம் ஈட்டும் தொழிலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை ..!  -ஜான்சன்