தஞ்சாவூர், டிச.18 - தேசிய அளவிலான உறைவாள் (sqay) போட்டியில் தஞ்சாவூர் மாணவி இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். அரியானா மாநிலம் பஞ்சகுல்லாவில் உள்ள தேவிலால் விளையாட்டு மைதானத்தில், 25 ஆவது தேசிய அளவிலான உறைவாள் விளையாட்டு போட்டிகள் கடந்த டிச.7 முதல் 9 வரை நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 1,500 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், தமிழகத்திலிருந்து பொறுப்பாளர்கள் ஈரோடு குணசேகரன், கும்பகோணம் செல்வம் ஆகியோரது தலைமையில் 70 வீரர், வீராங்கனைகள் சென்றனர். அவர்கள் 11 வயது, 14, 18 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் விளையாடினர். தமிழக வீரர்கள், வீராங்கனைகள் மட்டும் 19 தங்கம், 23 வெள்ளி, 34 வெங்கலப் பதக்கங்களை பெற்றனர். இந்த போட்டிகளில் தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் தர்ஷினி (18), வயதுக்குட்பட்டோர் பிரிவில் தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். மாணவி தர்ஷினி கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வருகிறார். மாணவிக்கு உறவினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.