districts

18 சதவீத ஜி.எஸ்.டி வரி ரத்து கோரி தில்லியில் பேரணி, ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.18 - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலப் பொதுக்குழு கூட்டம் செவ்வாயன்று திருச்சியில் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்றார். மாநிலப் பொருளாளர் சதக்கத்துல்லா ஆண்டறிக்கை வாசித்தார். மாநில தலைமைச் செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார் தீர்மான உரையாற்றினார். பொதுக்குழு கூட்டத்தில், 2025 மே 5 அன்று 42 ஆவது வணிகர் தின மாநில மாநாட்டினை சென்னை அருகில், மதுராந்தகத்தில் நடத்துவது. அரசின் கருவூலமாம் வணிகர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்தப்படும் வருங்கால வைப்பு நிதி, குடும்பநல நிதி, ஓய்வூதிய நடைமுறைகளை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளை கட்டாயம் முன்னெடுக்க வேண்டும். தற்போது அரசுகளின் செயல்பாட்டில் இருக்கும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் முடிவுகளை ஒன்றிய அரசு அறிவிப்பதற்கு முன், சட்ட முன்வடிவுகளை கொண்டு வரும் போதும், வரிவிதிப்பில் மாற்றங்கள் கொண்டு வரும் போதும், வணிகர் சங்க அமைப்பின் நிர்வாக பிரதிநிதிகளை அழைத்து கலந்தாய்வு நடத்த வேண்டும். ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட 2017ஆம் ஆண்டிலிருந்து முதல் 5 ஆண்டுகளான 2022 வரை தாக்கல் செய்த கணக்குகளில் உள்ள குறைபாடுகளை அரசு எடுத்துக் கொள்ளாமல், வணிகர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி சிரமப்படுத்தாமல், 5 ஆண்டுகளுக்கான கணக்குகள் மீது மீண்டும் எவ்வித ஆணையும் பிறப்பித்திடாத வகையில் சமாதானத் திட்டம் ஒன்றினை அறிவிக்க வேண்டும். ஆயத்த ஆடைகள் மீதான புதிய வரி உயர்வை கைவிட்டு, கைத்தறி ஆடைகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்துவரி, வணிகர்களுக்கான உரிமக் கட்டண உயர்வு, தொழில்வரி உயர்வு, குப்பை வரி, குப்பைக்கான அபராதக் கட்டணங்களை விலக்கிக் கொள்ள வேண்டும். வாடகை மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பை ரத்து செய்திட ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் 2025 மார்ச் மாதம் தலைநகர் தில்லியில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருச்சி மாவட்டத் தலைவர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.