கும்பகோணம், டிச.18 - கும்பகோணம் மாநகராட்சி தாராசுரம் பகுதி 34 ஆவது வார்டில் மாமன்ற உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த செல்வம் உள்ளார். இவர், அப்பகுதியில் சுகாதாரம், மின்விளக்கு, குடிநீர் மற்றும் அடிப்படை பணிகள் குறித்து அவ்வப்போது மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மாநகராட்சி கூட்டத்திலும் வலியுறுத்தி, அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறார். புதிய நகர்களாக அமைந்த சில பகுதியில் பள்ளமாக இருப்ப தால், கடந்த சில நாட்களாக பெய்த மழை நீர் வீட்டிற்குள் மழை புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களோடு முழு நேரமும் இருந்து, மாநகராட்சி மூலம் ராட்சத மோட்டார் மற்றும் இயந்திரங்களை வரவழைத்து, தேங்கிய தண்ணீரை உடனே அப்புறப்படுத்தினார் உறுப்பினர் செல்வம். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை பாது காப்பான இடத்தில் தங்க வைப்பதற்கும் ஏற்பாடு செய்து வருகிறார். மழை நீர் தேங்காமல் இருப்ப தற்கு நிரந்தரமாக வழிவகை செய்யப்படும் என சிபிஎம் மாமன்ற உறுப்பினர் செல்வம் தெரிவித்தார்.