districts

img

புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலர் ரா.சம்பத்குமார் காலமானார்

புதுக்கோட்டை, ஜன.16-  புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் செயலர் ரா.சம்பத்குமார்(67) உடல் நலக் குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை மாலை காலமானார். இறுதி நிகழ்ச்சி புதுக்கோட்டையை அடுத்த வல்லத்திராகோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 1975 இல் தொடங்கப்பட்ட புதுக்கோட்டை கம்பன் கழகத்துக்கு 2007 ஆம் ஆண்டு முதல் செயலராகப் பொறுப்பு வகித்தவர். ஆண்டுதோறும் 10 நாட்கள் கம்பன் பெருவிழாவை புதுக்கோட்டையில் தொடர்ச்சியாக நடத்தி வந்தவர். தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற இவர், புதுக்கோட்டையில் திருவருள் பேரவைத் தலைவர், நகர்நல இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், வர்த்தகர் கழகத்தின் கூடுதல் செயலர், திருக்கோவில்கள் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டவர்.  இவருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உள்பட 3 சகோதரர்கள், ஒரு சகோதரி உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டையில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. அவரது உடலுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், இலக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.