districts

img

பழுதடைந்த மண்ணியாற்றுப் பாலத்தை சீர்படுத்த மக்கள் கோரிக்கை

பாபநாசம், ஜன.16-  பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள ஊராட்சி கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியில், 40 ஆண்டுகளைக் கடந்த மண்ணியாற்றுப் பாலம் பழுதடைந்து, எந்தநேரத்திலும் இடியும் நிலையில் உள்ளது.  இந்த ஊராட்சியைச் சேர்ந்த பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடி காடு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது, அருகிலுள்ள வீரமாங்குடி, உம்பளாப் பாடி ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களும் இந்தப் பாலத்தை பயன்படுத்துகின்றனர். ஏராளமான வாகனங்களும் இந்தப் பாலம் வழியே சென்று வருகின்றன. கொள்ளிடத்தில் தண்ணீர் இல்லாத போது தொழில், வேலை வாய்ப்பு, கல்விக்காக கரையை கடந்து வரும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், இந்தப் பாலத்தை தான் பயன்படுத்துகின்றனர். இந்தப் பாலம் இடியுமானால் போக்குவரத்து துண்டிக்கப்படும். எனவே ஆயிரக்கணக்கான மக்களின் நலன் கருதி இந்தப் பாலத்தை இடித்து விட்டு புதிதாக பாலத்தை தரமாக கட்டவும், புத்தூரில் உள்ள மண்ணியாற்றுப் பாலமும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அதையும் இடித்து விட்டு புதிதாகத் தரமாக கட்டவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தஞ்சாவூரிலிருந்து, அய்யம்பேட்டை, கணபதி அக்ரஹாரம் வழியாக கபிஸ்தலம் செல்லும் அரசுப் பேருந்தை பட்டுக்குடி வரை காலை மாலை என இரு வேளை இயக்கினால், இப்பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், விவசாயிகள் என பலரும் பயன் பெறுவர் என்கின்றனர். இதே போன்று கொள்ளிடக் கரையை ஒட்டிச் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. 5 கிலோ மீட்டர் வரை இந்தச் சாலையை உடன் தரமாகப் போடவும் கோரிக்கை வைக்கின்றனர். வேதாரண்யம் கூட்டு குடி நீர் திட்ட பைப் லைன் இந்தச் சாலை வழியே செல்வதால், சம்பந்தப்பட்ட துறையினர் கூட இதைச் சீரமைக்கலாம் என்கின்றனர்.  சுகாதார நிலையம்  இந்த ஊராட்சியில் 4,000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஏதாவது உடல் நலக் குறைவு ஏற்பட்டால், சிகிச்சைக்காக அய்யம் பேட்டை, கபிஸ்தலம், பாபநாசம் தான் செல்ல வேண்டியுள்ளது. அவர்கள் பயன் பெறும் வகையில் இந்த ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் ஏற்படுத்த வேண்டும். இதே போன்று புத்தூர், கூடலூர், குடிகாடு, நாயக்கர்பேட்டை பாரதி நகரில் சமுதாயக் கூடம் கட்ட வேண்டும் என்கின்றனர். எம்.பி நிதியில் சமுதாயக் கூடமும், பட்டுக் குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு மாடிக் கட்டடமும் கட்டப்படுமானால் ஸ்மார்ட் கிளாஸ் அமைந்து மாணவர்கள் பயன் பெறுவர் என்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்தி, இப்பகுதி மக்களின் கஷ்டமறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்.