புதுக்கோட்டை, ஜன.16- புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே, செரியலூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கான கொப்பித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த கொப்பியம்மாள் என்ற பெண் குழந்தை அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், அதன் நினைவாகவும், ஊரில் யாரும் அம்மை போன்ற கொடிய நோயால் பலியாகக் கூடாது என்பதற்காகவும் கொப்பி திருவிழா நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பிறக்கும் பெண் குழந்தைகள் (பருவமெய்தாத பெண் குழந்தைகள்) பொங்கல் நாளுக்கு மறுநாள் விரதம் இருந்து, வீட்டில் வெண்பொங்கல் வைத்து, கொழுக்கட்டைகள் பிடித்து வைக்கின்றனர். அதில் கிருமிநாசினிகளான கூழைப்பூ, ஆவாரம்பூ, அருகம்புல், வேப்பிலை மற்றும் கரும்பு வெல்லம் வைத்து 3 படையலிட்டு, இரண்டு படையல்களை இதற்காகத் தயாரிக்கப்பட்ட ஓலை கூடையில் வைத்து கொப்பியம்மாள் இறந்த பழமையான பாலை மரத்தடிக்கு கொண்டு செல்கின்றனர். படையல் கூடைகளை பாலை மரத்தடியில் வைத்து குழந்தைகள், பெண்கள் கும்மியடித்து வழிபாடு நடத்துகின்றனர். சிறிய பெண் குழந்தைகள் உள்ள வீடுகளில் அவர்களின் தாயார் அல்லது சகோதரிகள் ஓலைக் கூடைகளை சுமந்து செல்கின்றனர். பல நூறு ஆண்டுகளாக முன்னோர்கள் தொடங்கிய இந்த கொப்பித் திருவிழாவை, தாங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.