பாபநாசம், மார்ச் 10- ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி மார்ச் 17 அன்று சவப்பெட்டி ஊர்வலம் நடத்தப்படும் என்று மமக தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரு மான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ‘‘ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி நிறைவேற்றியது. ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா வை 142 நாட்கள் கிடப்பில் வைத்திருந்த நிலையில், இக்காலகட்டத்தில் 47 தமிழர்கள் தம் உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார். தமிழ்நாடு ஆளுநரின் எதேச்சதிகார செயலை கண்டித்தும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட கிடப்பில் உள்ள அனைத்து சட்ட முன்வடிவுகளுக்கும் ஒப்புதல் வழங்க கோரியும் மார்ச் 17-ஆம் தேதி மமக சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு சவப்பெட்டிகளுடன் ஆர்ப்பாட்டம் நடை பெறும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.