பெரம்பலூர், ஜன.23- பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து, பெரம்பலூர் நகராட்சி, எளம்பலூர், தண்ணீர் பந்தல், வேப்பூர், சித்தளி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் எம்.லக்ஷ்மி, மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பயிர் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டார். அதனடிப்படையில், எளம்பலூர் கிராமத்தில் வெங்காய பயிர் பாதிக்கப்பட்டுள்ள வயலினையும், சித்தளி கிராமத்தில் மஞ்சள் மற்றும் கருணைக்கிழங்கு பயிர்கள் பாதிக்கப்பட்ட வயல்களையும் பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அந்தந்த விவசாயிகளிடம் பயிர்சேதம் குறித்தும், இதனால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்தும் கேட்டறிந்தார். பயிர்சேதம் குறித்து துறை சார்பில் அரசுக்கு அனுப்பி வைத்த தகவல்கள் அடங்கிய கோப்புகளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இழப்பீடு பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தார். இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் சு.தேவநாதன், வேளாண்மை இணை இயக்குநர் பாபு, தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் சத்யா உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.