2-5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சேர்க்க அறிவுறுத்தல்
தஞ்சாவூர், மே 27- இரண்டு முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சேர்த்து பயனடையுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியினை மேம்படுத்தும் பொருட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் 1,749 அங்கன்வாடி மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக்கல்வி போன்றவை வழங்கப்படுகிறது. குறிப்பாக 2 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் முறைசாரா முன்பருவக் கல்வி செய்கைப் பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத் திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப் படுத்தப்படுகிறது. மேலும், குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளி செல்ல ஆயத்தப் படுத்தப்படுகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது வீடுகள் தோறும் குழந்தைகள் சேர்க்கை பணி மேற்கொண்டு வருகிறார்கள். எனவே பெற்றோர்கள் தங்களது 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஜுன் மாதத்தில் அங்கன்வாடி மையத்தில் தவறாது சேர்த்திடவும், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருவதால் அச்சேவையையும் பயன்படுத்திக் கொள்ளுமாறும்” தெரிவித்துள்ளார்.
அரியலூரில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம்
அரியலூர், மே 27- அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், எரிவாயு நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். எனவே, நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின், இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
மே 30- விவசாயிகள் குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை, மே 27- புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மே 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள் மற்றும் வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானியதிட்டங்கள் குறித்து தெரிந்துகொள்வதுடன் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப் படிப்புக்கு உடனடி சேர்க்கை
பாபநாசம், மே 27- அய்யம்பேட்டை அருகே, ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா, ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு டிப்ளமோ உடனடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினிப் பொறியியல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் ஆகிய ஆறு பிரிவுகள் உள்ளன. முதலாமாண்டு சேர்க்கைக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. நேரடி இரண்டாமாண்டு சேர்க்கைக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி(அனைத்துப் பாட பிரிவுகளும்) மற்றும் ஐ.டி.ஐ(இரண்டாமாண்டு) தேர்ச்சி. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் (இரண்டாம் ஆண்டு மட்டும்), சாதி சான்றிதழ் அசல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம். மாணவர் சேர்க்கைக்கு தற்போது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.