பெரம்பலூர், ஜன.9- பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி சாலையில் உள்ள சமத்துவபுரம் அமராவதி நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகளை வழங்கி தொடங்கி வைத்தார். 12 ஆம் தேதி வரை அனைத்து நியாய விலைக்கடைகளிலும் டோக்கன் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது. விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜன.13 அன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் சு. கோகுல், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் க.பாண்டியன், கூட்டுறவு சங்க அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் பொதுமக்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி)அமித்குப்தா, வருவாய் கோட்டாட்சியர் அருள், மாநகராட்சி உதவி கமிஷனர் சண்முகம், மாமன்ற உறுப்பினர் புஸ்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜன.9 முதல் 12 ஆம் தேதிவரை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை வழங்கிடவும், ஜன.13 அன்று விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தார். நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை புதுக்கோட்டை மாநகராட்சி கோல்டன் நகர் அர்பன் கடை எண் 10 நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புகள் மற்றும் இலவச வேட்டி சேலைகளை மாவட்ட மாவட்ட ஆட்சியர் மு. அருணா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீவா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சே.கி. குணசேகரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் எம். சீதாராமன், வட்டாட்சியர் பரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை காவேரி நகரில் உள்ள மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நியாய விலைக் கடையில், பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், முதுநிலை மண்டல மேலாளர் மோகன், மயிலாடுதுறை நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர் சுதா முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.