திருவாரூர், ஆக.8 - பீகார் வாக்காளர் பட்டியல் மோசடிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உரையாற்றினார். அப்போது, “தேர்தலில் பாஜக -விற்கு வாக்களிக்காதவர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்திருப்பது வெளிப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி எல்லாம் மோசடி நடத்தி, தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்பதை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதாரத்துடன் வெளிப்படுத்தி உள்ளார். தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையம் பாஜக அரசின் கைப்பாவையாக தற்போது மாற்றப்பட்டிருக்கிறது. வாக்காளர் பட்டியல் மோசடி என்ற நிலைமாறி, தற்போது தேர்தல் ஆணையமே மோசடி என்ற நிலை ஏற்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார். “ஆதார் என்பது முக்கியமான அடையாள ஆவணம் என கூறப்பட்டு வந்த நிலையில், ஆதாரை ஆவணமாக ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவையும் போலி எனக்கூறி, 11 ஆவணங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆதாரை ஆவணமாக ஏற்குமாறு, உச்ச நீதிமன்றம் அறிவு றுத்திய பிறகும் தேர்தல் ஆணையம் அதை ஏற்க மறுக் கிறது” என்று கூறிய பெ. சண்மும், “இது பீகாருக்கு மட்டு மான பிரச்சனை இல்லை. பீகாரைத் தொடர்ந்து, அடுத்தடுத்து தேர்தல் நடைபெறவுள்ள அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த மோசடி அரங்கேறும் ஆபத்து உள்ளது. எனவே, இதனை எதிர்த்து முறியடித்தாக வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.