districts

திருச்சி முக்கிய செய்திகள்

இன்று பொது விநியோகத்  திட்ட குறைதீர் கூட்டம் 

தஞ்சாவூர், ஆக. 8-   பொது விநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அதனைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும், ஒவ்வொரு மாதமும், பொது விநியோகத்திட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, ஆகஸ்டு மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், ஆக. 9 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில், வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

“திருக்குறள் திருப்பணிகள்”  திட்டம்  கண்காணிப்புக்  குழு கூட்டம்

புதுக்கோட்டை, ஆக. 8-  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், “திருக்குறள் திருப்பணிகள்” திட்டம் செயல்படுத்துவது குறித்து கண்காணிப்புக்குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.  பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக செயல்படுத்தப்படும், குறள் பரிசுத் திட்டத்தில் கலந்துகொள்ளும் மாணாக்கர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் நோக்குடன் “திருக்குறள் திருப்பணிகள்” மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை உறுப்பினர் செயலராகவும் கொண்டு கண்காணிப்புக் குழு அமைக்கப் பெற்றுள்ளது. நுண்பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு மூன்று குழுக்கள், ஒரு வாரத்தில் அரை நாள் வீதம் ஆண்டுக்கு 30 வாரங்கள் திருக்குறள் பயிற்சி வகுப்புகள், பயிலரங்குகள் நடத்தப்படவுள்ளன என்றார்.

பணி மேம்பாட்டை உடனே வழங்குக! கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஆக. 8-  திருவிக அரசு கலைக்கல்லூரி மற்றும் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக கிளை பேராசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி நுழைவாயிலில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் முனைவர் ப.ரவீந்திரன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் முனைவர் தி.நடராஜன், தஞ்சை மண்டல துணைத் தலைவர் முனைவர் அ.முருகானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். கிளை பொருளாளர் முனைவர் ம.நாகேந்திரன் நன்றி கூறினார். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய  பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசாணை எண். 5 வெளி யிட்டு, நான்கு ஆண்டுகளுக்கு மேலாகி யும், வழங்கப்படாத பேராசிரியர்  பணிமேம்பாட்டை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 25 கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

மக்காச் சோளப்பயிருக்கு  மானியத்தில் இடுபொருள்கள்

தஞ்சாவூர், ஆக. 8-  தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர், பூதலூர் மற்றும் பேராவூரணி வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில், விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக விதைகள் மற்றும் இடுபொருள்கள் அடங்கிய தொகுப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக வேளாண்மை இணை இயக்குநர் வித்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மக்காச்சோளம், மக்களிடையே உணவு தானியமாக மிகச் சிறிய அளவிலேயே பயன்பாட்டில் இருந்தாலும், கால்நடைகளுக்கான தீவன உற்பத்தியில் குறிப்பாக கோழித் தீவன உற்பத்தியில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் ஒன்றிய அரசின் வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், கடந்தாண்டு முதல் இப்பயிர் முக்கிய அங்கம் வகிக்கிறது. விதைப்பு முதல் அறுவடை வரை குறைந்த தொழிலாளர்கள் பயன்பாட்டை கொண்ட பயிராகவும், பூச்சி நோய் தாக்குதல் குறைவாக உள்ள பயிராகவும் உள்ளது. மேலும், விவசாயிகளுக்கு தானியமும் தட்டும் தீவனமாக பயன்பாட்டில் உள்ளதால், விவசாயிகள் இப்பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வீரிய ஒட்டு ரக மக்காச்சோளத்தில் அதிக மகசூலும், கூடுதல் விலையும் கிடைப்பதால், விவசாயிகளின் பொருளாதாரம் உயர வாய்ப்பு உள்ளது. மக்காச்சோள பயிர் இறவை மற்றும் மானாவாரி சாகுபடிக்கு ஏற்றதாகவும் உள்ளது. எனவே, சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், தஞ்சாவூர், பூதலூர் 50 தொகுப்புகள் மற்றும் பேராவூரணி வட்டாரத்தில் வரும் ராபி பருவத்தில் வழங்கப்படவுள்ளன.  இத்தொகுப்பில் வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதை, நுண்ணுயிர் உரம், நானோ யூரியா, இயற்கை உரம் ஆகியவற்றைக் கொண்ட ரூ.6 ஆயிரம் மதிப்பிலான தொகுப்பு மானியமாக வழங்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

ரயில்வே துறையின்  உத்தரவை அமல்படுத்தாத அதிகாரியை கண்டித்து  டிஆர்இயு ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஆக.8- கடலூரில் நிகழ்ந்த விபத்திற்கு பின்பு, ரயில்வே துறை பொது மேலாளர் விதித்த அவசர உத்தரவை முறையாக அமல்படுத்தாத ரயில்வே அதிகாரியை கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு தட்சிண ரயில்வே தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் மணிகண்டன் பிரபு தலைமை வகித்தார். கிளை பொருளாளர் ராமகிருஷ்ணன், கிளைச் செயலாளர் அழகிரி, துணைச் செயலாளர் பாண்டியன், கோட்டத் தலைவர் சிவக்குமார், கோட்டச் செயலாளர் கரிகாலன், துணைப் பொதுச் செயலாளர் ராஜா,  கோட்ட பொறுப்பாளர்கள், மயிலாடுதுறை கிளைத் தலைவர் ஜவகர், செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரயில்வே துறையில் நான்-இன்டர்லாக் கேட்டுகளில் ரயில்வே துறை பொது மேலாளர் உத்தரவின்படி மூன்று சிப்ட் முறையில் 8 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும். ரயில்வே பொது மேலாளர் உத்தரவை நடைமுறைப்படுத்துவதாக கூறிக் கொண்டு, தனது விருப்பம் போல் இடமாற்றம் செய்யும் எஸ்எஸ்இ தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலைகளில் ரயில்வே தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது.  சங்க வித்தியாசம் இன்றி அனைவரையும் சமமாக நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

தரமான சான்று பெற்ற  நெல் விதைகளை பயன்படுத்த அறிவுறுத்தல்

பாபநாசம், ஆக. 8-  தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குநர் சுஜாதா விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “தற்போது சம்பா பருவ நெல் சாகுபடிக்கு நாற்று விடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்ட சாகுபடிக்கென வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் விரும்பும் சாவித்ரி, ஆடுதுறை 51 போன்ற ரக நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் வாங்கிய விதை நெல்லிற்கான ரசீது, மூட்டையில் உள்ள விபர அட்டை ஆகியவற்றை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.  மேலும், தாங்கள் வாங்கிய விதை நெல்லில் ஒரு கைப்பிடி அளவு ஊறவைத்து அடுத்த நாள் அதன் முளைப்பு திறனை தாங்களே அறிந்து கொண்டும், பின்னர் நாற்றங்காலில் விதைக்க வேண்டும். இதன்மூலம் விதை தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முன்கூட்டியே தவிர்த்து விடலாம். தற்போது அனைத்து வட்டாரங்களிலும் விதை ஆய்வாளர்கள் விதை மாதிரிகளை சேகரித்து விதை முளைப்புத் திறன் பரிசோதனை செய்து வருகிறார்கள். எனவே, சம்பா நெல் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் இந்த பருவத்துக்கு உகந்த, தரமான சான்று பெற்ற நெல் விதைகளை பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

கஞ்சா கடத்திய வழக்கில்  4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை, ஆக. 8-  இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு 40 கிலோ கஞ்சா கடத்தியதாக, ராமேசுவரம் தலைமன்னார் நகர் ஜெயசீலன்(55), இராமநாதபுரம் தில்லைநாச்சியம்மன் குடியிருப்பைச் சேர்ந்த ராஜேந்திரன் (54), திருப்பூர் குளத்துப்பட்டியைச் சேர்ந்த ஒச்சம்மாள் (55), கருவம்பாளையம் கார்த்தி (36) ஆகிய 4 பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கு, புதுக்கோட்டையிலுள்ள அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து முதல் குற்றவாளியான ஜெயசீலன் (முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்) சென்னை புழல் சிறைக்கும், இதர 3 பேரும் மதுரை மத்திய சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாணவர் சங்க கும்பகோணம் மாநகர மாநாடு

கும்பகோணம், ஆக. 8-  இந்திய மாணவர்கள் சங்க கும்பகோணம் மாநகர மாநாடு, கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.  மாநாட்டிற்கு தஞ்சை மாவட்ட குழு உறுப்பினர்  திவ்யா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் ராகுல் துவக்கரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் நவ சூர்யா மற்றும் மகேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். எதிர்காலத் திட்டமிடல், குறித்து மாவட்டக் குழு உறுப்பினர் சரவணன் முன்மொழிந்தார் மாவட்டத் தலைவர் வசந்த் நிறைவுரையாற்றினார். மாநாட்டில், கும்பகோணம் மாநகரத் தலைவராக பிரபாகரன், செயலாளராக ராகுல் உள்ளிட்ட 20 பேர் கொண்ட மாநகரக் குழு புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில்  குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு  8 மாத சம்பள பாக்கியை வழங்கக் கோரிக்கை

தஞ்சாவூர், ஆக. 8-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில், கடந்த எட்டு மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.  இது குறித்து சமூக ஆர்வலர் நாடியம் முருகானந்தம் அனுப்பியுள்ள மனுவில்,  “சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் மிகக் குறைந்த ஊதியமான ரூ.250-க்கு பணிபுரியும் குடிநீர்த் தொட்டி இயக்குபவர்களுக்கு உள்ளாட்சி அமைப்பினரின் பதவிக்காலம் முடிந்து கடந்த எட்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. குறிப்பாக நாடியம் ஊராட்சியில் 12 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இதே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர், கடந்த இருபது வருடங்களாக இயக்கி வருவதோடு, தொட்டியை சுத்தம் செய்து பராமரிப்பதுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணியையும் செய்து வருகின்றனர். 8 மாதமாக ஊதியம் வழங்கப்படாததால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவர்களுக்கான நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். அரசு நிர்ணயித்தபடி இவர்களை நிரந்தர பணியாளர்களாக ஆக்குவதோடு மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.