திருத்துறைப்பூண்டியில் காதல் ஜோடிக்கு சிபிஎம் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் சிபிஎம் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணம் செய்யலாம் எப்போதும் திறந்து இருக்கும் என கூறினார்.
இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா மாத்தூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்குமார் என்பவரும் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வரம்பியம் பகுதியைச் சேர்ந்த அமிர்தா இருவரும் தஞ்சாவூரில் கல்லூரியில் படிக்கும் போது காதல் மலர்ந்துள்ளது.
இருவருக்கும் இன்று எட்டுக்குடி முருகன் கோவிலில் திருமணம் நடத்த இருந்த நிலையில் நேற்று முன்தினம் சஞ்சய் குமாரை அவரது பெற்றோர் தரப்பில் கடத்தி சென்றதாகவும் இதுகுறித்து பெண் வீட்டார் அளித்த புகாரின் பேரில் மதுரை பகுதியில் வைத்து அவரை போலீசார் மீட்டு அழைத்து வந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் டி.முருகையன் தலைமையில் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் முன்னிலையில் காதல் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி திருத்துறைப்பூண்டி நகர காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் மனு அளித்தனர்.