மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மஹாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில், எலி கடித்த இரு பச்சிளம் குழந்தைகளில் ஒரு குழந்தை நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மஹாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில், NICU-வில் வைக்கப்பட்டிருந்த பிறந்து ஒரு வாரமே ஆன இரு பச்சிளம் குழந்தைகளில் ஒரு குழந்தையின் விரல்களையும், மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோளில் எலி கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இரு குழந்தைகளும் வேறு அறைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், ஒரு குழந்தை நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தைகளை எலி கடித்த விவகாரம் தொடர்பாக இரண்டு செவிலியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊழியர்கள் சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.