districts

எல்லை பாதுகாப்புப்படை வீரர் மரணம் குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

புதுக்கோட்டை, ஜன.16-  பணியில் இருக்கும்போது உயிரிழந்த எல்லைப் பாதுகாப்புப்படை வீரரின் உடல், வியாழக்கிழமை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.  புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே, வாகவாசல் கிராமத்தைச் சேர்ந்த கர்ணன் மகன் கண்ணதாசன்(56). கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லைப் பாதுக்காப்புப் படையில் பணிபுரிந்து வந்தார். தற்போது, டெல்லியில் பணியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், புதன்கிழமை பணியில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவரது உடல் சொந்த ஊரான வாகவாசலுக்கு கொண்டுவரப்பட்டது. உறவினர்களும் கிராமப் பொதுமக்களும் ஏராளமானோர் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கண்ணதாசனின் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் குண்டுகள் முழங்க, வியாழக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்பட்டது.