கரூர், பிப்.25- கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டிற்கு அருகில் உள்ள சோளக்காட்டிற்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் சென்றுள்ளார். அப்போது, அந்த மாணவியை கடவூர் வட்டம் செம்பியநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கயவர்கள், கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். இதனால் பயந்து போன மாணவி, கத்தி உள்ளார். அந்த கயவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளனர். இந்த மாணவி, அவர்களை தள்ளி விட்டு உயிருக்கு பயந்து தப்பியோடி உள்ளார். தனது மகளைக் காணவில்லை என்று மாணவியின் தாயார், மகளைத் தேடிச் சென்றபோது கழுத்து அறுக்கப்பட்டு படுகாயம் அடைந்து, உயிருக்குப் போராடும் நிலையில் மாணவி கிடந்துள்ளார். அதனைப் பார்த்த தாய் கூச்சலிட்டு, அருகில் இருந்த பொதுமக்களை அழைத்து, அவர்களது உதவியுடன் குஜிலியம்பாறை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலைமையில் அம்மாணவி மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து வந்த பாலவிடுதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சந்தேகத்தின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகளுக்கும், பெண்களுக்கும் கரூர் மாவட்டத்தில் பாதுகாப்பு இல்லாததையே இந்த கொடூரக் கொலை முயற்சி காட்டுவதாகவும், இந்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிப்பதுடன், இந்த சம்பவத்தில், கரூர் மாவட்ட காவல்துறை உண்மை நிலையைக் கண்டறிந்து, உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு கூறியுள்ளார். நேரில் சந்தித்து ஆறுதல் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. ராமமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் பி. பழனிவேல், மாவட்டக் குழு உறுப்பினர் பி.வேல்முருகன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சுமதி, புகலூர் நகராட்சி வார்டு கவுன்சிலர் இந்துமதி ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து விபரங்களை கேட்டறிந்து, ஆறுதல் கூறினர். இதனைத் தொடர்ந்து, மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சுமதி, இந்துமதி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாதிக்கப்பட்ட மாணவியை கத்தியால் கழுத்தில் மிகவும் ஆழமாக அறுத்துள்ளனர். உயிருக்குப் போராடிவரும் மாணவி, தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். கரூர் மாவட்ட காவல்துறை, மாவட்டத்தில் சிறுமிகள், பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் ரீதியாக தொல்லை அளிப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து தகுந்த தண்டனை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கூறினர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பளிப்பதோடு, மாணவிக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.