districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு  வார விழா

தஞ்சாவூர், அக்.30 -  இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்.31 ஆம் தேதியையொட்டி, ஆண்டுதோறும் அக்.28 முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  அதன்படி, தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகுகள் சார்பாக ஊழல்  தடுப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி, மருதுபாண்டியர் நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கொ.மருதுபாண்டியன் வழிகாட்டுதல்படியும், கல்லூரி முதல்வர் மா.விஜயா  அறிவுறுத்தலின்படியும் நடை பெற்றது. நிகழ்வில், கல்லூரி துணை முதல்வர் இரா.தங்க ராஜ் வாழ்த்திப் பேசினர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவ லர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன்  விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.  அதன்பின்னர், தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக  நடத்தப்பட்ட ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. பேரணியை தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்பு  பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணியானது தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி காவேரி நகரில்  நிறைவடைந்தது.  பேரணியில் மருதுபாண்டியர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள், நாட்டு நலப்பணித் திட்ட திட்ட அலுவலர் முனைவர் ந.சந்தோஷ்குமார் மற்றும்  பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 

போக்சோ வழக்கில் அதிமுக நிர்வாகி கைது

தஞ்சாவூர், அக்.30 - தஞ்சாவூர் மாவட்டம், பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபன் (33). இவர், அதிமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலா ளராக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொறுப் பேற்றார். இவர், 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஒருவரை,  தொடர்ந்து கிண்டல் செய்து, பாலியல் ரீதியாக தகாத  முறையில் நடந்து வந்துள்ளார். இந்நிலையில் திங்கள்கிழமை  காலை, சிறுமி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது,  அவரை வழிமறித்து மீண்டும் கிண்டல் செய்து, பாலியல் ரீதி யாக தகாத முறையில் பேசி நடந்து கொண்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி திங்களன்று இரவு, பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிந்து செவ்வாயன்று தீபனை கைது செய்தனர்.

தென்னையில் காண்டாமிருக வண்டு  தாக்கத்தை கட்டுப்படுத்தும் வழிகள்

பாபநாசம், அக்.30 - தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப் பேட்டை வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநர் வினோதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: காண்டாமிருக வண்டானது தென்னை மரத்தின் நுனி பகுதியில் உள்ள குருத்து பகுதியில் துளைத்து, திசுக்களில் சேதத்தை  உண்டாக்கும். அத்துளைகளின் வழியாக சக்கையும் நாற்கழிவும் வெளியே தள்ளப்ப டும். அவ்வண்டு தாக்கப்பட்ட குருத்துகளின் இலைகள் விரியும்பொழுது முக்கோண வடி வில் விசிறி போன்ற வெட்டுப்பட்ட பகுதியை  காணலாம். புழுக்கள் எருக்குழிகளில் சி  வடிவத்தில் காணப்படும். வண்டுகள் கருமை  அல்லது சிவப்பு கலந்த கருமை நிறத்தில் தலையில் நீண்ட கொம்புகள் கொண்டு காணப்படும். ஆண்டு முழுவதும் இதன் தாக்குதல் இருந்தாலும், ஜூன் முதல் செப்டம் பர் வரை அதிகமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த எருக்குழிகள் தென்னந்தோப்புகளுக்கு அருகில் இருப் பதை தவிர்க்க வேண்டும்.  இருக்கும் பட்சத் தில், மாதத்திற்கு ஒருமுறை அக்குழிகளை கிளறி புழுக்களை வெளிக்கொணர வேண்டும். எருக்குழியில் மெட்டா ரைசியம் என்ற  பூஞ்சானத்தை ஆங்காங்கே துளையிட்டு  செலுத்தும் போது புழுக்கள் நோய்வாய்ப் பட்டு இறந்து விடும். மக்கிய தென்னை மரங்களின் அடிப் பாகத்திலும் புழுக்கள் வாழும். தாக்கப்பட்ட மடிந்துபோன மரங்களை  தோப்பிலிருந்து அகற்றி அழித்து விட வேண்டும். தோப்பை சுத்தமாக வைக்க வேண்டும். வண்டுகள் துளைத்த துவாரம் வழி யாக நீளமான கம்பியை கொண்டு குத்தி வண்டுகளை அழிக்கலாம்.  அந்து உருண்டைகளை இளம் மட்டை களுக்கு நடுவே 45 நாட்களுக்கு ஒருமுறை வைத்து கட்டுப்படுத்தலாம். ஒரு பங்கு வேப்பங்கொட்டை பவுடர், இரண்டு பங்கு மணலுடன் கலந்து 150 கிராம் என்ற அளவில் ஒரு மரத்திற்கு மட்டையின் அடிப் பாகத்தில் வைக்க வேண்டும்.  ரைனா லியூர் என்னும் இனக் கவர்ச்சி  பொரியினை ஹெக்டேருக்கு ஐந்து என்ற  அளவில் வைத்து ஆண் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். ஒரு கிலோ ஆம ணக்கு பிண்ணாக்கு 5 லிட்டர் தண்ணீரில் கலந்து, ஊறலை மண் பானைகளில் தென்னந் தோப்பில் ஆங்காங்கே வைப்பதன் மூலம்  காண்டாமிருக வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். இந்த ஊறலை மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். மேலும் விவரங் களுக்கு அம்மாப்பேட்டை தோட்டக்கலைத் துறை வட்டார அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயிர்க் காப்பீடு  செய்ய நவ.15 கடைசி நாள்

பாபநாசம், அக்.30 - பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நிக ழாண்டு நெற்பயிருக்கு காப்பீடுச் செய்ய AICL பொதுக் காப்பீடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு பிரீமியம் செலுத்த  கடைசி நாளாக நவ.15 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தில் சம்பா நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.548 பிரீமியம் தொகையாக விவசாயிகள் செலுத்த வேண்டும். விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் இ-அடங்கல் அல்லது அடங்கல் படிவத்தைப் பெற்று, விண்ணப்ப படிவம், முன்மொழிவு படிவம், ஆதார் கார்டு நகல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கு ஆகியவற்றை இணைத்து அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய  வங்கிகளிலோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமோ பதிவு செய்யலாம். விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யும்போது  அனைத்து தகவல்களும் சரியாக பதிவு செய்யப் பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.  கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளும் பதிவு  செய்யலாம். பொது சேவை மையங்களில் பயிர்க் காப்பீடு  பதிவுச் செய்யும் விவசாயிகளின் அடங்கலில் பதிவேற்றம்  செய்யப்பட்டதற்கான முத்திரையை கண்டிப்பாக இடு மாறு அறிவுறுத்தப்படுகிறது. இணையத்தில் பதிவேற்றம்  செய்யப்பட்டது என முத்திரை உள்ள அடங்கல்களை மீண்டும் பதிவேற்றம் செய்யக் கூடாது என்று பொது சேவை மையங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.  மேலும் விவசாயிகள் பொதுச் சேவை மையங்க ளில் தொகை செலுத்தும் போது பயிர் சாகுபடி செய்துள்ள  அனைத்து சர்வே எண்களும், அதற்கான பரப்பும் சாகு படி செய்துள்ள கிராமமும் சரியாக பதியப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து, பின் அதற்கான பட்டியலை பெற்று  பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் காப்பீடு தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள்  இருப்பின் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவ லரை தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட பாப நாசம் வேளாண் உதவி இயக்குநர் முகமது பாரூக்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

வேளாண் விளைபொருட்களுக்கான அக்மார்க் தரம் பிரித்தல், பகுப்பாய்வு பயிற்சி

நாகர்கோவில். அக்.30- கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்வணிகத்துறை  சார்பில்  வேளாண் விளைபொருட்களை அக்மார்க் தரம்பிரித்தல்  மற்றும் பகுப்பாய்வு செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.  இப்பயிற்சியில்   வேளாண்துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) எஸ்.கீதா அக்மார்க் திட்டத்தின் முக்கி யத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். மத்திய அரசின் விற்பனையாக்கம் மற்றும் ஆய்வு இயக்கு நரக மதுரை மண்டல முதுநிலை விற்பனை அலுவலர் ஹரிஷ் அக்மார்க் பொருட்களை தரம்பிரிப்பது, பகுப்பாய்வு  செய்வது குறித்து எடுத்துக்கூறி  செயல் விளக்கம் அளித்தார். மாநில அக்மார்க் தரம்பிரிப்பு ஆய்வக வேளாண்மை அலுவலர் ரா.ஜோசப் ராஜேஷ், அக்மார்க்  திட்டத்தில் புதிய கட்டுமானர் ஆவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறினார்.  மேலும், அக்மார்க் முத்திரையுடன் வரும் பொ ருட்கள் அனைத்தும் தரத்திற்கும், சரியான எடைக்கும் கலப்படமற்ற தன்மைக்கும் அரசு உத்தரவாதம் அளிக்கி றது என விளக்கிக் கூறினார். கன்னியாகுமரி விற்பனைக் குழு  செயலாளர் த.விஷ்ணப்பன்  வேளாண் விளை பொருட்களை தேசிய வேளாண் சந்தையில் விற்பனை செய்யும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். பயிற்சியின் முடிவில் கலந்து கொண்ட விவசாயி களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.