tamilnadu

img

இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனை விரைவில் பேச்சுவார்த்தை நடத்த இலங்கைக்கு இந்தியா கோரிக்கை!

சென்னை, அக். 30 - இலங்கை காவல்துறையால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலை யில், இந்தியா - இலங்கை கூட்டு மீன் வளக் குழு கூட்டத்தில், இரு நாட்டு  மீனவர் சங்கங்களுடன் விரைவில் சந்திப்பு நடத்த இந்தியா வலியுறுத்தியுள்ளது. கொழும்புவில் நடைபெற்ற இந்திய - இலங்கை கூட்டு மீன்வளக் குழுவின் 6-ஆவது கூட்டத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக இந்திய உயர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கடைசியாக மார்ச் 2022-இல் காணொலி வாயிலாக சந்தித்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் எல்லை யோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். சர்வதேச கடல்எல்லை வரம்பை மீறிய தாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அண்மையில் ஒன்றிய வெளியுறவு த்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், “2024-ஆம் ஆண்டில்  மட்டும் இதுபோன்ற 90 சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது (அக்டோபர் 27, 2024) 140 மீனவர்கள் மற்றும் 120 படகுகள் இலங்கை காவல்துறை வசம் உள்ளன” என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படு வது இராமேஸ்வரத்தில் போராட்டங் களைத் தூண்டியுள்ளது.  

மறுபுறத்தில், இலங்கையில் வடமாகாண மீனவர்கள், சட்டவிரோத மீன்பிடிப்புக்கும் மேலாக, தமிழக மீனவர்கள் ‘அழிவு தரும்’ இழுவை வலை மீன்பிடிப்பில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்த வகையிலான மீன்பிடிப்பு 2017 ஜூலை முதல் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டுக்குழு சந்திப்பில், தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயங் களை சுட்டிக்காட்டி, எந்த சூழ்நிலை யிலும் பலப்பிரயோகத்தை தவிர்க்க வேண்டும் என, இலங்கையிடம் இந்தியா  வலியுறுத்தியது. இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விரைவில் விடு விக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. மீனவர்கள் தொடர்பான பிரச்சனைகளை ‘மனிதாபிமான முறையில்’ கையாள வேண்டும் என்றும், ‘வாழ்வாதாரக் கவ லைகளை’ கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது. இந்திய குழுவுக்கு மீன்வளத்துறை செயலாளர் அபிலாஷ் லிக்கி தலைமை தாங்கினார். இலங்கை குழுவிற்கு மீன்வளத்துறை செயலாளர் எம்.பி.என்.ஏ. விக்கிரமசிங்கே தலைமை வகித்தார். “மீனவர்கள் தொடர்பான பிரச்சனை களுக்கு இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நீண்டகால தீர்வு காண விரிவான பேச்சுவார்த்தைகள் தொடரும்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.