கியூபா மீதான அமெரிக்கத்தடைகள்: மீண்டும் கடுமையாக்கப்பட்ட முற்றுகை
ஜோபைடன் ஆட்சிக்காலத்தில் தளர்த்தப்பட்டிருந்த கியூபா மீதான பொருளாதாரத்தடைகளை டிரம்ப் நிர்வாகம் மீண்டும் திணித்துள்ளது. ஜூன் 30-ல் பிறப்பிக்கப்பட்ட நிர்வாக ஆணை மூலம், சோசலிசக் கியூபாவின் ராணுவத்துடன் தொடர்புள்ள நிறுவனங்களுக்கெதிராக புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் நியாயப்படுத்தல்கள் அமெரிக்க வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, “கியூபாவின் கம்யூனிஸ்ட் ஆட்சியில் அந்நாட்டு மக்கள் நீண்டகாலமாகத் துன்பத்தில் உள்ளனர். சுதந்திரமான, ஜனநாயகக் கியூபாவை உருவாக்க டிரம்ப் உறுதி கொண்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறையால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் கியூபாவுக்குத் தப்பியோடி, அந்நாடு அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதாகவும் இந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. குறிப்பாக, அமெரிக்கச் சிறையில் இருந்து தப்பியோடிய கறுப்பின விடுதலைப் போராளி அசாட்டா ஷக்கூருக்கு கியூபா அரசியல் அடைக்கலம் வழங்கியுள்ளது. எனினும், மனித உரிமைகளுக்கான ஐநா கமிஷன் ஷக்கூருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை ‘கொடூரமான, வினோதமான தண்டனை’ என்று குறிப்பிட்டுள்ளது. கியூபாவின் பதிலடி கியூபாவின் ஒருமைப்பாட்டு செயல்பாட்டாளரும், மக்கள் நாடாளுமன்றத்தின் நிர்வாக இயக்குநருமான மனோலோ டி லாஸ் சாண்டோஸ் தனது எக்ஸ் தளத்தில் கடுமையாகப் பதிலளித்துள்ளார்: “டிரம்பின் தாக்குதல் சுதந்திரம் குறித்தானது அல்ல; பட்டினியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதே. எங்கள் சுதந்திரத்தை அமெரிக்காவிடம் சரணாகதி அடையச் செய்யும் கொடூர முயற்சியாகும். அமெரிக்கத் தடைகளால் கியூபாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.” சர்வதேச எதிர்ப்பு உலகின் பெரும்பாலான நாடுகள் கியூபா மீதான அமெரிக்காவின் தடைகளைக் கண்டித்துள்ளன. வெனிசுலா, காலத்திற்குப் பொருந்தாத மனிதாபிமானமற்ற கொள்கையை அறிவித்துள்ள டிரம்பின் நிர்வாக ஆணையை வாபஸ் பெறக் கோரி கியூபாவிற்கு ஒருமைப்பாட்டுக் கடிதம் வெளியிட்டுள்ளது. அமெரிக்க மக்களின் பொலிவாரிய கூட்டணி, கியூபாவைக் கபளீகரம் செய்வதே அமெரிக்காவின் உண்மையான நோக்கம் என தெரிவித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் ஜோ பைடன் பதவி விலகுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்கியிருந்தார். டிரம்ப் பதவியேற்ற உடனேயே மீண்டும் கியூபாவை இப்பட்டியலில் சேர்த்துள்ளார். கியூபாவிற்குச் செல்லும் அமெரிக்கப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளையும் டிரம்ப் புதுப்பித்துள்ளார். உலகம் முழுவதும் கியூபா ஒருமைப்பாட்டு ஆதரவும் உணர்வும் மேலோங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.